சென்னை: காமராசரின் நினைவு நாளான இன்று (அக்.2) நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை கிண்டியில் உள்ள காமராஜர் நினைவகத்தில் இருக்கும் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறுகையில், “தமிழ் மக்களுக்கு எழுத்தறிவு கொடுத்த இறைவன் பெருந்தலைவர் காமராஜர். அவர் ஊழல் லஞ்சமற்ற சாதி, மத மோதல் இல்லாமல் சிறப்பான ஆட்சியை கொடுத்தவர்.
எண்ணற்ற ஏரிகள், குளங்கள், அணைகள் கட்டி நீர் வளத்தை பெருக்கிய நீர் மேலாண்மை வல்லுநர். 14 ஆயிரம் பள்ளிக்கூடங்களுக்கு மேலே திறந்து எல்லோரையும் படிக்க வைத்தவர். எண்ணற்ற தொழிற்சாலைகளை கொண்டு வந்து படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெருக்கி நாட்டு மக்களிடையே நிலவிய வறுமையை போக்கியவர்.
இதையும் படிங்க: "ரஜினி சொன்ன குதிரை சாமி முனீஸ்வரர் தான்".. 51 தேங்காய்கள் உடைத்து ரசிகர்கள் சிறப்பு பூஜை!
காமராசரை போல் ஒரு தலைவன் இருந்துள்ளார் என்பதை இன்றைய தலைமுறைகள் நம்ப மறுக்கின்ற அளவிற்கு வாழ்ந்து மறைந்தவர். ஒன்பது ஆண்டுகளுக்கு நாட்டின் விடுதலைக்காக போராடி சிறையில் இருந்தவர். 60 ஆண்டுகாலம் ஆட்சி செய்து இவர்கள் செய்யாத சாதனைகளை ஒன்பதே ஆண்டுகளில் சாதித்தவர்.
எவ்வளவு உள்ள தூய்மையோடு மக்களுக்கு நேர்மையாக நின்று உழைத்தாரோ அதைப்போல ஊழல் லஞ்சம் அற்ற, உண்மையும் நேர்மையும் ஆன நிர்வாகத்தை அவர் வழியே வருகின்ற வீரத்தமிழ், மானத் தமிழ் பிள்ளைகள் நாங்கள் இந்த நிலத்தில் உறுதி அளிக்கிறோம்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்