திருநெல்வேலி: தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கு மார்ச் 20ஆம் தேதி முதல் மார்ச் 27ஆம் தேதிவரை வேட்பு மனுத்தாக்கல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.அதன்படி கடந்த வாரம் தொடங்கிய வேட்புமனு நேற்றுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் களத்திற்கு சென்று மக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரம் கட்டி வருகின்றனர்.
தேர்தல் சின்னம்: வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதை அடுத்து, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை தவிர்த்து சுயேச்சை வேட்பாளர்களுக்கு இன்று(வியாழக்கிழமை) சின்னம் ஒதுக்கப்படும் என தெரிகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் கணிசமான வாக்கு வங்கியை வைத்துள்ள நாம் தமிழர் கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில் 'கரும்பு விவசாயி' சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் இந்த முறையும் அதே சின்னத்தில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் கரும்பு விவசாயி' சின்னத்தில் மீண்டும் போட்டியிட விரும்பினால் ஆணையத்திடம் விண்ணபிக்க வேண்டும். ஆனால் சீமானின் நாதக கரும்பு விவசாயி சின்னத்துக்கு சரியான நேரத்தில் விண்ணப்பிக்கவில்லை.
இதனால் கர்நாடகாவைச் சேர்ந்த 'பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு 'கரும்பு விவசாயி' சின்னம் ஒதுக்கப்பட்டது. இது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. இதனை எதிர்த்து நாதக கட்சியினர் வழக்கு தொடர்த்தனர், இருப்பினும் அவர்களுக்கு சாதகமான முடிவுகள் ஏதும் வரவில்லை.
இந்தநிலையில் ’மைக்’ சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம். பின்னர் மைக் சின்னத்திற்கு பதிலாக படகு, கப்பல் சின்னங்களில் ஏதாவது ஒன்றை ஒதுக்க நாம் தமிழர் கட்சி கோரிக்கை வைத்தது, ஆனால் அக்கட்சியின் கோரிக்கையை ஆணையம் நிராகரித்தது.
புதிய யுக்திகள்: இதனால் குறுகிய நாட்களில் 'மைக்' சின்னத்தை பொதுமக்கள் மத்தியில் சேர்க்கும் பணியில் அக்கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். முன்னதாக சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் நாதக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சின்னத்தை அறிமுகம் செய்துவைத்தார்.
-
எதிர்வரும் ஏப்ரல் 19 அன்று, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தலுக்கும், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கும் பொதுச்சின்னமாக… pic.twitter.com/7hedj9H8Av
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) March 27, 2024
இதனையடுத்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் சீமான். அதன்படி நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார். பின்னர் நேற்று பிற்பகல் நெல்லை மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சீமான் பங்கேற்று பேசிய பொதுக்கூட்டம் மேடை அருகில் அம்பேத்கர், அறிஞர் அண்ணா, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், லெனின், மகாத்மா காந்தி, உள்ளிட்ட பெருந்தலைவர்கள் அந்த காலத்தில் உபயோகப்படுத்திய மைக் படத்தினை பிளக்ஸ் பேனர்களாக உடனடியாக மாற்றி நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் நடைபெறும் பொதுக் கூட்ட மேடையை சுற்றி வைத்து டிரெண்ட் செய்தனர்.
இதையும் படிங்க: "எடப்பாடியும், உதயநிதியும் படத்தை வைத்து படம் காட்டுகிறார்கள்" - நெல்லையில் சீறிய சீமான்!