கரூர்: கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தண்டாயுதபாணி தலைமையில், நேற்று (ஜன.31) நடைபெற்ற விவசாயிகள் மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டத்தில், கரூர் மாவட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.
இந்தக் கூட்டத்தில் வேளாண்மை துறை இணை இயக்குநர் ரவிச்சந்திரன், குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (மேலாண்மை) உமா உள்ளிட்ட பல்வேறு அரசு துறை சார்ந்த கலந்து கொண்டனர்.
தரகம்பட்டி விவசாயிகள் சங்கப் பிரதிநிதி ஆறுமுகம், தனியாக நிலம் வைத்து விவசாயம் செய்வோருக்கு வேலையாட்கள் கிடைக்காமல், விவசாயப் பணிகள் பாதிக்கப்படுவதால், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களைக் கொண்டு தனிநபர் விவசாய பணிகளை மேற்கொள்ளக் கோரிக்கை வைத்தார். இதே போல வீரியம்பட்டி கோவிந்தராஜ் என்ற விவசாயி கரூரெட்டி குளத்தைத் தூர்வார வேண்டுமெனக் கோரிக்கை வைத்தார்.
மேலும், திருமாநிலையூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி வேலுசாமி என்பவர், அமராவதி ஆற்றில் இருந்து சாயப்பட்டறை நிறுவனம் சட்டவிரோதமாகத் தண்ணீர் எடுத்துப் பயன்படுத்தி வருவது குறித்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகம், தென்னிலை க.பரமத்தி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கும் சட்டவிரோத கல் குவாரிகளுக்கு டன் கணக்கில் வெடி மருந்து விநியோகம் செய்யப்படுவது குறித்து மாவட்ட காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனப் பேச முற்பட்டபோது, கரூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் உமா, கரூர் மாவட்டத்தில் நடைபெறும் விவசாயிகள் கூட்டத்தில், கல்குவாரி மீது புகார் பெற்றுக்கொள்ளவும், பேசுவதற்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாய சங்க பிரதிநிதிகள், வெளிநடப்பு செய்வோம் என எச்சரித்ததைத் தொடர்ந்து, மீண்டும் பேசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகம், “கரூர் மாவட்டத்தில் கல்குவாரிகள் அதிகளவில் இயங்குவதால் அதிகளவிலான பாதிப்பு விவசாயிகளுக்கு தான் ஏற்படுகிறது என்பதை விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் புகார் தெரிவிக்காமல் எங்கு தெரிவிப்பது.
கரூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் கூட சட்டவிரோத கல்குவாரிகள் குறித்து பேசுவதற்கு அனுமதி இல்லை என மறுப்பது, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. கரூர் மாவட்டத்தில் டன் கணக்கில், கல் குவாரி நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக வெடி மருந்து சப்பளை செய்யும் நபர்களைக் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.
கரூர் ராயனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி சின்னத்துரை என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக, திருமானூர் பகுதியில் உள்ள வாய்க்காலை தூர்வாரி தர வேண்டும் என கோரிக்கை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அளித்தும், மனு மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் மெத்தனமாகச் செயல்படுவதாகத் தெரிவித்தார்.
மேலும், செல்லாண்டிபாளையம் ராயனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் அவ்வப்போது கழிவுநீரை வாய்க்கால்களில் வெளியேற்றுவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளைக் கூட்டத்திற்கு அழைத்து, கோரிக்கை மனுக்களைப் பெறும் சம்பிரதாய நிகழ்வாக இல்லாமல், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து தரப்பு விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: சத்துணவில் முட்டைகள் எண்ணிக்கை குறைவு..! சத்துணவு அமைப்பாளரை பணியிடை நீக்கம் செய்ய ஆட்சியர் உத்தரவு!