நீலகிரி: நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தேர்தல் கண்காணிப்பு சிறப்பு படை அதிகாரிகள், பல்வேறு இடங்களில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணங்கள், தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நீலகிரியில் சிட்டிங் எம்.பியாக இருக்கும் ஆ.ராசா, இம்முறையும் நீலகிரி தொகுதியில் போட்டியிடுகிறார். அதனால், கடந்த 25ஆம் தேதி நீலகிரிக்குச் சென்ற ஆ.ராசாவின் காரை, கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குங்சப்பனை சோதனைச் சாவடி அருகே, பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை நடத்தினர். ஆ.ராசாவின் காரில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.
அப்போது காரை சோதனையிட்ட பறக்கும் படையினர், முறையாக சோதனை செய்யவில்லை என பலரும் விமர்சனம் செய்து வந்தனர். மேலும், ஆ.ராசாவுக்கு ஆதரவாக பறக்கும் படையினர் செயல்படுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டது.
இந்நிலையில், திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் வாகன சோதனையை முறையாக மேற்கொள்ளாததாக, அலுவலர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் வாகன சோதனை முறையாக மேற்கொள்ளாத அலுவலர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மார்ச் 25ஆம் தேதி அன்று FST 3B பறக்கும் படை குழுவில் கீதா என்பவர் (குழந்தைகள் நல திட்ட அலுவலர், கோத்தகிரி) திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் வாகன சோதனை முறையாக மேற்கொள்ளவில்லை என்று வெளிவந்த செய்தியின் அடிப்படையில், மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான அருணா தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டதில், முறையாக வாகனப் பரிசோதனை மேற்கொள்ளவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
அதன்படி. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 134 - இன் கீழ் (RP Act 1951 section 134) கீதா என்பவர் மார்ச் 30 முதல் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சித்தலைவரால் உத்தரவிடப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.