தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, கும்பகோணம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சென்னையில் ஒரு இடம் மற்றும் தஞ்சாவூரில் 5 இடம் உட்பட மொத்தம் 12 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ஹிஸ்புத் தஹ்ரீர் என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பில் இருந்த நபர்களின் இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் உள்ளிட்டோர் இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சோதனைக்குப் பிறகு எவ்வித ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும், அதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் தெரியவரும் என தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் குழந்தையம்மாள் நகரில் அகமது என்பவர் வீட்டில் இன்று காலையிருந்து தேசிய புலனாய்வு அமைப்பின் துணைக்காவல் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையில் நான்கு பேர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், தஞ்சாவூர் மாவட்டம் மானாங்கோரையில் ஷேக் அலாவுதீன் என்பவரது வீட்டிலும், சாலியமங்கலத்தில் அப்துல் ரகுமான் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் வீட்டிலும் சோதனை நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்புடன் தொடர்பு? தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்ஐஏ சோதனை