சென்னை: தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்ததாக கடந்த மே மாதம் ஹிஜிபுதாகிர் சர்வதேச தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஆதரவாளர்கள் அமீர் உசேன் என்ற பொறியாளரும், அவரது தந்தை மன்சூர் மற்றும் சகோதரர் அப்துல் ரகுமான், அவர்களது நண்பர்களான முகமது மாரீஸ், காதர் நவாஸ் ஷெரீப், அகமது அலி உமாரி உள்ளிட்ட 6 பேர் மீது UAPA சட்டத்தின் அடிப்படையில் சென்னை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
குறிப்பாக, கைதான 6 பேரும் பல வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஹிஜிபுதாஹிர் அமைப்பின் மூலமாக உலகளாவிய காலிபெட் இஸ்லாமியக் கொள்கை முறையை ஷரியா சட்டத்தின் அடிப்படையில் கொண்டு வர முயன்றதாக சென்னை சைபர் கிரைம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
சென்னையில் முதல்முறையாக சர்வதேச இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர். தொடர்ச்சியாக அவர்களிடம் விசாரித்த நிலையில், இவர்கள் ஹிஜிபுதாகிர் அமைப்பின் சிந்தனைகளை பரப்புவதை முக்கியமாக செய்து வருவது தெரிய வந்தது. மேலும், அமீர் உசேன் இது குறித்த பல்வேறு வீடியோக்களை யூடியூபில் வெளியிட்டுள்ளதை போலீசார் கண்டறிந்தனர்.
சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான பல்வேறு கருத்துக்களை மக்களிடம் பரப்பி வருவதாக போலீசார் கண்டுபிடித்தனர். மேலும், இந்த அமைப்பின் கொள்கைப்படி, ஜனநாயகத்தின் நம்பிக்கை இல்லாமல் காலிபெட் கொள்கை முறையில் மக்கள் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினர். காணொலிக் காட்சி மூலமாக கூட்டங்கள் நடத்துவதும், குறிப்பிட்ட நபர்களை மட்டும் அழைத்து பூட்டப்பட்ட அறைக்குள் கூட்டங்களை நடத்தியதையும் போலீசார் கண்டறிந்துள்ளனர்.
இது மட்டுமல்லாது, சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் என்ற பெயரில் அதிகளவு கூட்டங்களை நடத்தியதாகவும், ஒவ்வொரு வாரம் நடத்தப்பட்ட கூட்டங்களில் ஆட்கள் அதிகமாக சேர்ந்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, இந்த 6 பேர் மீதும் ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து, இந்த ஆறு பேருடனும் தொடர்புடைய நபர்கள் யார் என்பது குறித்தும், இதற்கு நிதி எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தேசிய புலனாய்வு முகமை இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது கைது செய்யப்பட்ட நபர்கள் ராயப்பேட்டை பகுதியில் இருந்து, யூடியூப் மூலம் அமைப்புக்கு ஆள் சேர்க்க பயன்படுத்திய இடத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வுக்குப் பிறகே இதில் தொடர்புடைய பலர் விசாரணை வளையத்தில் சிக்குவார்கள் என தெரிகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை துவக்கி வைத்த முதலமைச்சர்.. கோவை, திருப்பூர், ஈரோடு மக்களின் கனவு..!