சென்னை: கடந்த 2022ஆம் ஆண்டு, சேலம் மாவட்டத்தில் ஓமலூர் அருகே போலீசார் நடத்திய சோதனையில் 4 நபர்கள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களோடு போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் இருந்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து பிடிபட்ட நபர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக அந்த 4 நபர்களும் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த என்.ஐ.ஏ (NIA) அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், பிப்ரவரி 2ஆம் தேதி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளான சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 5 நபர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
திருச்சி, மதுரை, தென்காசி, இளையான்குடி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் நடந்த சோதனையில் செல்போன், சிம்கார்டுகள், விடுதலைப் புலிகள் தொடர்பான புத்தகங்கள் உள்ளிட்ட பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 5 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு, சென்னையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, சாட்டை துரைமுருகன் அவரது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்து நீக்கிய, விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான வீடியோக்கள் குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனர். அதையடுத்து, சாட்டை துரைமுருகன் யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்து, பின்னர் நீக்கப்பட்ட விடுதலைப் புலிகள் தொடர்பான வீடியோக்களையும், மேலும் அவர் பதிவேற்றம் செய்த 1,500 வீடியோக்களை கேட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன், 5 வீடியோக்கள் உட்பட 1,500 வீடியோக்களையும் என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். அந்த வீடியோக்கள் அனைத்தையும், என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு செய்து, அடுத்தகட்ட விசாரணைக்குத் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.