சென்னை: பெரும்பாக்கம் சதுப்புநில பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் சாலை அமைத்து வருவதாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், தாமாக முன் வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு, தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்ய நாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பெரும்பாக்கம் சதுப்புநில பகுதிக்குள் சாலை அமைக்கப்பட்டதாக சொல்லப்படும் இடம் 'காசா கிராண்ட்' நிறுவனத்திற்கு சொந்தமான பட்டா நிலம் எனவும், இந்த நிலத்தில் குடியிருப்பு கட்டுவதற்கு முறையே அனுமதி பெறப்பட்டதாகவும் காசா கிராண்ட் நிறுவனத்தின் சார்பில் வாதிடப்பட்டது.
தொடர்ந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ராம்சார் குறியீடு பெறப்பட்ட சதுப்பு நிலப் பகுதி எனவும், அதனை ஒட்டியுள்ள இந்த நிலத்திற்கு பட்டா கொடுத்திருக்க வாய்ப்பில்லை எனவும், புஞ்சை நிலமாக நீர்முழ்கி பட்டா மட்டுமே கொடுத்திருக்க வாய்ப்புள்ளது எனவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாயம், இந்த நிலத்திற்கு நீர்முழ்கி பட்டா கொடுக்கப்பட்டது என்றால், அந்த பகுதியில் கட்டுமானம் மேற்கொள்வது சட்டப்படி தவறு. இந்த நிலம் என்ன வகையான நிலம் என்பது குறித்த அனைத்து அரசு ஆவணங்களையும் தாக்கல் செய்ய செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 17ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: தவெக கொடி அறிமுக விழாவிற்கு காவல்துறை அனுமதி மறுப்பா?