தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அடுத்துள்ள ஆலந்தலை பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவரின் மனைவி சசிகலா. இவர் கடந்த 6ஆம் தேதி பிரசவத்திற்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது மருத்துவர் பணியில் இல்லாததால், மருத்துவமனை செவிலியர் பிரசவம் பார்த்தாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து சசிகலாவிற்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும்போது அதிக எடை கொண்டு பிறந்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகக் கூறி, இரண்டு நாட்கள் சிகிச்சை அளித்துள்ளனர். இருப்பினும், குழந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படாததை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
தூத்துக்குடி மருத்துவமனையில் ஏழு நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்துவந்த குழந்தை, 7 நாட்களுக்கு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த நிலையில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில், மருத்துவர் பணியில் இல்லாததால் அதிக எடை உள்ள குழந்தையை அறுவை சிகிச்சை செய்யாமல், செவிலியர் சுகப்பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் அவர்கள, திருச்செந்தூர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் நடைபெற்ற இப்போராட்டம் குறித்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இச்சம்பவத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சசிகலாவின் உறவினர்களிடம் உறுதி அளித்ததை அடுத்து அவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.
இதுகுறிந்து குழந்தையின் உறவினர் சுமதி என்பவர் கூறுகையில், கடந்த திங்கள்கிழமை அன்று சசிகலா பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, சுமார் 4 கிலோ எடை இருந்த குழந்தையை, மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்கள் சுகப்பிரசவம் மூலம் எடுத்துள்ளனர். குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மரணமடைந்துள்ளது. பிரசவத்தின்போது மருத்துவர்கள் ஏன் இல்லாமல் போனார்கள்? இனி யாருக்கும் இந்த நிலை ஏற்படக்கூடாது. இந்த துயர சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கதறி அழுதபடி கூறினார்.
மேலும், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்கவரும் கர்ப்பிணி பெண்கள் அலைக்கழிக்கப்பட்டு வருவதாகவும், பிரசவ வார்டில் உள்ள செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் அவதூறாக பேசுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் முறையான விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட உறவினர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதையும் படிங்க: நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் ராகிங்.. இரண்டு மாணவர்கள் சஸ்பென்ட் - மருத்துவர் கார் கண்ணாடி உடைப்பு!