மதுரை: உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் மாநகரின் நடுவே அமைந்துள்ளது. இக்கோயிலை சுற்றிலும் உள்ள வீதிகளில் பல்லாயிரக்கணக்கான கடைகள் இயங்கி வருகின்றன. இதனால் அப்பகுதியில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. மேலும் கோயில் சுற்றுப் பகுதி தெருக்கள் குருகியதும், நெருக்கடியான சாலைகளையும் கொண்டுள்ளது.
கோயிலுக்கு தீவிர பாதுகாப்பு: இந்நிலையில் கோயில் பாதுகாப்பு கருதி நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோயிலின் ஒவ்வொரு வாசலிலும் பணியிலுள்ள வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்களை உள்ளே அனுமதிக்கின்றனர். தவிர சட்டம், ஒழுங்கு, குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கென தனி காவல் நிலையமும் செயல்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கும்பகோணம் காஞ்சி சங்கர மடக்கிளையில் கோலாகலமாக நடந்த நவராத்திரி சுமங்கலி பூஜை!
தீ விபத்தில் சேதமடைந்த வசந்தராயர் மண்டபம்: இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோயிலின் கிழக்கு பகுதியில் அம்மன் சன்னதிக்கு செல்லும் கோபுரத்துக்கு வடக்கிலுள்ள வீர வசந்தராயர் மண்டபம் தீ விபத்தால் முற்றிலும் சேதமடைந்தது.
அவசர தேவை கிடைக்கவில்லை: அப்போது, தீயணைப்பு வீரர்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அவசர நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட கோயில் பகுதியில் தீயணைப்பு நிலையம் அவசியம் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.
நடவடிக்கை எடுத்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: இதனை வலியுறுத்தி அப்போதைய எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த பழனிவேல் தியாகராஜன், கோவில் இணை ஆணையருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பினார். இதையடுத்து விபத்து மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென கோரி, சட்டமன்ற கூட்டத் தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
தற்காலிக தீயணைப்பு நிலையம்: இதையடுத்து மீனாட்சி அம்மன் கோயிலுக்கென சிறப்பு தீயணைப்பு நிலையம் உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதன்படி கோயிலின் மேற்கு கோபுரம் அருகே திடீர் நகர் தீயணைப்பு நிலைய கட்டுப்பாட்டில் தற்காலிகமாக தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருந்து வந்தனர்.
புதிய தீயணைப்பு நிலையம்: இதனைத் தொடர்ந்து கோயிலுக்கு வடக்குப் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு புதிய தீயணைப்பு நிலையம் ரூ.1.17 கோடியில் 3,053 சதுரடி பரப்பளவில் அமைத்திட தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நடவடிக்கை எடுத்தார்.
நவீன வசதியுடன் தீயணைப்பு நிலையம்: தற்போது அந்த புதிய சிறப்பு தீயணைப்பு நிலையத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக இந்த புதிய சிறப்பு தீயணைப்பு நிலையத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆகியோர் நேரில் பங்கேற்றனர்.
இந்த சிறப்பு தீயணைப்பு நிலையத்தில் ஒரே நேரத்தில் இரு தீயணைப்பு வாகனங்கள் நிறுத்துமிடம், வீரர்கள் தங்கும் அறைகள், ஓய்வறைகள் என தேவையான கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்