சென்னை: சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் ஒருவர் மண்ணடி சாலையில் உள்ள காளிகாம்பாள் கோயிலைச் சேர்ந்த அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பாலியல் புகார் ஒன்றை அளித்திருந்தார். மேலும், அதில் கார்த்திக் முனுசாமி மயக்க மருந்து கொடுத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில், கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் 13.05.2024 அன்று முதல் தகவல் அறிக்கை எண் - 15ல் இந்திய தண்டனைச் சட்டம் 354A, 294(B), 312, 506(1), 67 Aஉள்ளிட்ட உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தமிழக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக, அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சமீபத்தில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி நிபந்தனை ஜாமீனில் வந்தார். ஆனால், கடந்த ஐந்து நாட்களாக அவர் நீதிமன்ற உத்தரவுகளை மீறி தலைமறைவாகி விட்டதாகவும் அவர் தரப்பிலிருந்து தனக்கு மிரட்டல்கள் வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் புதிய புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
இளம்பெண் பரபரப்பு புகார்: இது தொடர்பாக, நேற்று விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், "கார்த்திக் முனுசாமி ஜாமீனில் வெளிவந்த நிலையில், கடந்த ஐந்து நாட்களாக காவல் நிலையத்தில் கையெழுத்திடாமல் இருக்கிறார். நீதிமன்ற உத்தரவுப்படி, அவர் ஒவ்வொரு சனிக்கிழமையும் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனும் நிபந்தனை உள்ளது. ஆனால், அந்த நிபந்தனையை அவர் மீறி இருக்கிறார்.
நீதிமன்ற உத்தரவுப்படி ஜூலை 25ஆம் தேதி வரை தான் அவர் மதுரை காவல் நிலையத்தில் கையொப்பமிட்டுள்ளார். அதன் பின்னர் மறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வழக்கு நடைபெறும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திடுமாறு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆனால், இந்த தகவல் இதுவரை விருகம்பாக்கம் காவல் நிலையத்தை வந்து அடையவில்லை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அவரும் நேரில் வந்து கையொப்பம் இடாமல் தலைமறைவாகியுள்ளார்.
இதனை காவல்துறை தரப்பிலிருந்து எனக்கு உறுதி செய்துள்ளனர். ஏற்கனவே அவர் சிறைக்கு செல்லும் முன்பு என்னை வெட்டி கொல்லப் போவதாக மிரட்டல் விடுத்திருந்தார். அவர் தற்போது தலைமுறைவாக வெளியே உள்ளதால் எனக்கு எந்தவித பாதுகாப்பும் கிடையாது. எனது உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் தற்போது காவல் நிலையம் வந்துள்ளேன். எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்பதால் தான் நான் ஊடகங்களையும் தேடி வந்துள்ளேன்.
கார்த்திக் முனுசாமி தனது பண பலத்தையும், அதிகார பலத்தையும் வைத்து ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக நான் மேல்முறையீடு செய்வேன். காவல்துறை அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன். அதிகாரத்தில் இருப்பவர்களுடன் தொடர்பில் இருப்பதாலும் பண பலம் படைத்தவராக இருப்பதாலும், அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஈடுபடுகிறார். அதுமட்டுமின்றி பல விஐபிகள் தொடர்பு அவருக்கு இருக்கிறது. இதனால் அவர் மீது மீண்டும் புகார் அளிக்க உள்ளேன்" என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: "அதிமுக மாஜி அமைச்சர் சரோஜா வழக்கில் போதுமான ஆதாரங்கள் உள்ளன" - காவல்துறை வாதம்! - aiadmk ex minister saroja case