சென்னை: மதுரவாயல் நெற்குன்றம் 145வது வார்டில் தேர்ச்சி பெற்ற 10 மற்றும் 12ஆம் மாணவர்களுக்கு பதக்கம், விருது, புத்தகப்பை உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை வார்டு கவுன்சிலர் சத்தியநாதன் ஏற்பாடு செய்திருந்தார்.
இதன்படி, தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் வந்து கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய கவுன்சிலர் சத்தியநாதன், மாணவர்கள் அனைவரும் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், செல்போனை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "முதல் இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு மட்டும் இன்றி, தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பரிசுப் பொருட்கள் கொடுக்கப்பட்டது. பிற நடிகர்களை பார்த்து தொடங்கப்பட்ட திட்டம் இல்லை இது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அம்மா அறக்கட்டளை என்ற பெயரில் இது நடத்தப்பட்டு வருகிறது.
பரிசுப் பொருட்கள் மட்டும் இன்றி எங்கள் பகுதியில் உள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இலவச மாலை வகுப்பு எடுத்து வருகிறோம். பெற்றோர் இல்லாத பல குழந்தைகளுக்கும் கல்வி கற்க உதவி செய்கிறோம்" என்று கூறினார்.
அதன் பின்னர், தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் வரிசையில் நின்று பரிசுத் தொகுப்பினை பெற்றுக் கொண்டனர். பின்னர் மாணவர்கள் அனைவருக்கும் கவுன்சிலர் ஏற்பாட்டில் பிரியாணியுடன் கறி விருந்து வழங்கப்பட்டது. இதில் மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் பங்கேற்று உணவருந்திவிட்டு சென்றனர்.
இதையும் படிங்க: கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கட்டணத்தை இணையத்தில் வெளியிட உத்தரவு! - College Fees Details Order