திருநெல்வேலி: நெல்லை பாளையங்கோட்டை அருகே கடந்த 20ம் தேதி பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளராக கருதப்பட்ட தீபக் ராஜா மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து 6 தனிப்படை அமைக்கப்பட்டு பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இவ்வழக்கில், 4 பேர் கைது செய்யப்பட்டு கொலை வழக்கோடு எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, இதில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகளான கூலிப்படை தலைவன் நவீன், லெஃப்ட் முருகன், லட்சுமி காந்த், சரவணன் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
உடல் ஒப்படைப்பு: இக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைதாகியிருப்பதால் தீபக் ராஜாவின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். இதையடுத்து, தீபக் ராஜாவின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது சொந்த ஊரான வாகைகுளத்திற்கு தேசிய நெடுஞ்சாலை வழியாக எடுத்துச் செல்லப்பட்டது. உடல் கொண்டு செல்லப்படும் முக்கிய சாலைகள் மற்றும் வாகைகுளத்தில் இரண்டு காவல் துணை ஆணையர்கள் தலைமையில், சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: நெல்லை தீபக் ராஜா உடல் ஒப்படைப்பு; பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான போலீஸ்! - Nellai Deepak Raja Murder
4 மணி நேர ஊர்வலம்: போலீசார் எதிர்பார்த்தபடி ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் தீபக் ராஜா உடல் கொண்டு செல்லப்படும் வாகனத்தை இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் பின் தொடர்ந்தனர். இந்நிலையில், சுமார் 20 கிலோ மீட்டரை நான்கு மணி நேரமாக கடந்த அவரது உடலை சொந்த ஊரான வாகைகுளத்திற்குக் கொண்டு சென்றனர். காலை 10.30 மணியளவில் உடல் ஒப்படைக்கப்பட்ட நிலையில், பிற்பகல் 2.30 மணி அளவில் தீபக் ராஜாவின் சொந்த ஊரான வாகைகுளத்திற்கு வந்து சேர்ந்தது.
இறுதி அஞ்சலி: பின்னர், தீபக் ராஜாவின் உடலுக்கு அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்கு நடத்தினர். தொடர்ந்து உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. சுமார் 3 மணி நேரம், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீபக் ராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி ஊர்வலத்தில், பல்வேறு கிராமங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
உடல் நல்லடக்கம்: பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான கூடி நிற்க, தீபக் ராஜா உடல் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த ஏழு நாட்களாக தீபக் ராஜா கொலை விவகாரத்தில் பரபரப்பு நீடித்த நிலையில், இன்று அவரது உடல் சேகுவாரா(Che Guevara), ஃபிடல் காஸ்ட்ரோ(Fidel Castro) போன்ற புரட்சியாளர்களின் புத்தகங்களும் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: உச்சகட்ட டென்க்ஷன்.. நடந்தே செல்லும் டிஐஜி, எஸ்பி.. உற்றுநோக்கும் டிஜிபி.. நெல்லை ரிப்போர்ட்..! - Deepak Raja Funeral