சென்னை: தமிழக மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை (மார்ச்.01) தொடங்கி மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்குச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கினார்.
இது குறித்து அவர் கூறியதாவது, "தமிழக மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை தொடங்கப்படவுள்ளது. இதில் 3,58,201 மாணவர்கள் மற்றும் 4,13,998 மாணவிகள், ஒரு திருநங்கை என மொத்தம் 7.72 லட்சம் பேர் பொதுத் தேர்வினை எழுதவுள்ளனர்.
இதற்காக 3302 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 3200 பறக்கும் படையினர் மற்றும் 1135 நிலையான பறக்கும் படை உறுப்பினர்கள், 43200 தேர்வு அறை மைய கண்காணிப்பாளர்கள் பணியாற்ற உள்ளனர்.
மேலும், மாணவர்கள் சரியான நேரத்திற்குப் பள்ளிக்கு வருவதற்காகப் போக்குவரத்துத் துறையின் மூலம் ஏற்படும் செய்யப்பட்டுள்ளனர். தடையில்லா மின்சார விநியோகத்திற்காக மின்சார வாரியம் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். பொதுத் தேர்வு மாணவர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, காற்றோட்டமான அறைகள் உள்ளிட்டவை செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
கடந்தாண்டு 50 ஆயிரம் மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதாமல் தவிர்த்துள்ளனர். இதனைத் தவிர்க்கும் விதமாகப் பள்ளிக்குச் சரியான வருகை சதவீதம் உள்ள மாணவர்கள் மட்டும் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கரோனா தொற்று காலம் என்பதால் அனைவரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டதும், அதனை இந்தியத் தேர்தல் ஆணையம் பெற்றுக் கொண்டனர். எனவே, தேர்தல் அறிவிப்பு வெளியானாலும் பொதுத் தேர்வு நடைபெறுவதில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
ஆசிரியர்களுக்கு வேண்டுகோள்: கடந்த முறை போராட்டம் நடத்திய ஆசிரியர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினோம். அப்போது, தமிழகத்தில் நிதி நிலைமை குறித்து எடுத்துரைத்தோம். ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்துத் தெரியாமல் ஒன்றும் இல்லை.
அதற்காகத் தான் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் பல சங்கங்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து உள்ளனர். இன்னும் பல சங்கங்களுடைய கோரிக்கை பெறப்படவுள்ளது. இதன் முழுமையான அறிக்கையைத் தமிழக முதலமைச்சரிடம் வழங்கும் போதுதான் அதற்கான முழுமையாக விவரம் எங்களுக்குத் தெரியவரும்.
அதுவரை, ஆசிரியர் பெருமக்களுக்கு நான் வைக்கக் கூடிய கோரிக்கை, மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தங்களுடைய போராட்டங்களைக் கைவிட வேண்டும். கோரிக்கை வைக்கின்றோம் என்பதற்காக ஆசிரியர்களின் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்டவற்றை நாங்கள் கண்டுகொள்ளாமல் இல்லை. முழுமையாக அதை உள்வாங்கி இருக்கின்றோம் என்பதால் தான் உரிமையுடன் உங்களிடம் இந்தக் கோரிக்கையை முன் வைக்கின்றோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உலக முதலீட்டாளர் மாநாடு 2024; டிஆர்பி ராஜா தலைமையில் 17 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைப்பு!