புதுச்சேரி : தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையின் 4 வது படை பிரிவு வீரர்கள் 30 பேர் கொண்ட 1 குழு நவீன மீட்பு உபகரணங்களுடன் புதுச்சேரிக்கு விரைந்து சென்றுள்ளனர். மேலும், மீட்பு பணிகளை மேற்கொள்ள படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக என்டிஆர்எப் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் எனவும், அடுத்த 5 நாட்களுக்கு லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை : கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், முன்னெச்சரிக்கையாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச 12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கனமழையால் தத்தளிக்கும் விழுப்புரம், புதுச்சேரி..மீட்பு பணியில் ராணுவம்!
முன்னதாக, ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் தொடர் கனமழை பெய்தது. புதுச்சேரியில் மட்டும் 48.4 செமீ மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் இது வரை பெய்த மழைகளில் இதுவே அதிக அளவிலான மழைப் பொழிவாகும். இதற்கு முன், கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 செ.மீ மழை பதிவாகியது குறிப்பிடத்தக்கது.
கனமழை காரணமாக, புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் 10,000 எக்டேர் பயிர்கள், 50 படகுகள், 15 கூரை வீடுகள் என அனைத்தும் சேதமடைந்தன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 நிவாரணமாக வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.