சென்னை: கடந்த மாதம் பிப்ரவரி 15ஆம் தேதி டெல்லியில் 2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருளை மத்தியப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில், இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு மூலையாகச் செயல்பட்டு வந்த தமிழகத் திரைப்படத் தயாரிப்பாளரும், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பவரைக் கடந்த 15 நாட்களாகத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
மேலும், ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் மத்தியப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு அவர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்கள்,துறைமுகங்களில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சொகுசு விடுதியில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை மத்தியப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பொறிவைத்துக் கடந்த மார்ச் 9ஆம் தேதி கைது செய்தனர்.
கடந்த சனிக்கிழமை அன்று கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை ஏழு நாட்கள் காவலில் எடுத்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில், ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் கடத்தல் நெட்வொர்க் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியாவில் பல்வேறு நாடுகளுக்கு விரிவடைந்து இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் இவர் தமிழகத்திலிருந்து இலங்கைக்குப் போதைப் பொருட்களைக் கடத்தினாரா? என்ற கோணத்திலும், தற்போது போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜாபர் சாதிக் ராமநாதபுரம் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால் அங்கிருந்து கடல் வழியாகப் போதைப் பொருட்களை இலங்கைக்குக் கடத்தினாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த வழக்கில் முன்னதாக கைது செய்யப்பட்டுள்ள சென்னையைச் சேர்ந்த முகேஷ் மற்றும் முஜிபர் ரகுமான், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக் குமார் ஆகிய மூவரும் டெல்லியில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு அவர்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலை வைத்து ஜாபர் சாதிக்கிடும் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கு டெல்லியில் ஜாபர் சாதிக்கு சொந்தமான குடோன் ஒன்றுக்கு அழைத்துச் சென்று போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.
அதேபோல், ஜாபர் சாதிக்கை சென்னை அழைத்து வந்து அவருக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனைகள் நடத்தி தமிழகத்திலிருந்து, இலங்கைக்கு ஜாபர் சாதிக் போதைப் பொருட்களைக் கடல் மூலம் கடத்தினாரா? என்று கோணத்திலும் தற்போது விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான மூவர், பாஸ்போர்ட் பெற ஏற்பாடு - நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்..