திருநெல்வேலி: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் மண்டல வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு பொதுமக்கள் விவசாயிகள், மற்றும் தொழிலாளர்கள் ஆகியோரிடம் கருத்துக்களைக் கேட்டறிந்து வருகின்றனர்.
அந்த வகையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் உள்ளடக்கிய மண்டல கருத்துக் கேட்புக் கூட்டம் திருநெல்வேலியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (பிப்.8) நடைபெற்றது. இதில் முன்னாள் அதிமுக அமைச்சர்களான ஜெயக்குமார், வளர்மதி உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு முன்னதாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது "ஓ.பன்னீர்செல்வத்தை எந்த தொண்டரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழகத்தில் மக்கள் மனதில் எப்போது நினைத்திருக்கும் ஒரே கட்சி அதிமுக தான் அது மீண்டும் ஆட்சிக்கு வரும். அதிமுகவில் இருந்து பாஜகவில் சேர்க்கிறேன் என்ற பெயரில் 17 பேரைத் தேடிப் பிடித்து, அவர்களை பாஜகவில் இணைத்து இருக்கிறார்கள்.
திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இருந்து அதிமுக வந்தவர்களை பாஜகவில் இணைத்து இருக்கிறார்கள்.பாஜகவில் இணைந்த 17 பேரை வைத்து ஒரு மாயை உருவாக்க நினைகிறார். அவர்களை வைத்து அண்ணாமலை ஆளுநரை சந்திப்பார். ஆளுநர் ரவியிடம் 17 பேரை வைத்து ஆட்சி அமைக்க மனு கொடுப்பார் அப்படித்தான் அண்ணாமலை ஆட்சி அமைக்க முடியும்.
பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகள் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது, அதிமுக மட்டும் தான் வெற்றி பெறும். பாஜக இரண்டு சதவீதம் மட்டுமே வாக்குகளை வைத்துள்ளனர். ஓபிஎஸ் இன் கருத்தைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் அவர் அதிமுக வேட்டியே உடுத்த தடை உள்ளது. ஓபிஎஸ் பாஜகவின் அடிமையாக மாறிவிட்டார் அவரை பாஜக முடுக்கி விடுகிறது, அதன்படி செயல்படுகிறார்.
கடந்த 2021 தேர்தலில் திமுகவுக்கும் எங்களுக்கும் இரண்டு புள்ளி ஐந்து சதவீதம் மட்டும் தான் வித்தியாசம். தமிழ்நாடு தற்போது போராட்டம், கொலை கட்ட பஞ்சாயத்து நடக்கும் மாநிலமாக மாறி உள்ளது. கடன் வாங்குவதில் இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது. 2010, 11 திமுக ஆட்சியில் இருந்து போகும் போது ஒன்றரை லட்சம் கோடி கடன் வைத்து விட்டுத் தான் சென்றார்கள்.
பத்தாண்டுகளில் நாங்கள் 3.50 லட்சம் கோடி கடன் வாங்கினோம். அவர்கள் 30 மாதத்தில் மூன்று லட்சம் கோடி வாங்கி உள்ளார்கள். திருநெல்வேலி மாநகராட்சியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எதுவும் இல்லை. முதலமைச்சரின் வெளிநாடு சுற்றுப்பயணம் தொடர்பாக முழு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
வெளிநாடு சென்றது முதலீடு செய்யவா முதலீடு ஈர்க்கவா என்பதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். செய்தித்தாள்களில் தற்போது வெளியாவது கருத்துக்கணிப்பு அல்ல கருத்து திணிப்பு. எங்களது கூட்டணி மகத்தான வெற்றி பெறும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: நெல்லையில் பாஜகவைக் கண்டித்து திமுக அல்வா கொடுக்கும் நூதன போராட்டம்!