சென்னை: கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து, மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே, வயநாடு நிலச்சரிவு குறித்து தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கேரளாவின் கோட்டயம், இடுக்கி, வயநாடு ஆகிய மாவட்ட ஆட்சியர்கள், மீட்புப் பணி மற்றும் சேத விவரங்கள் மற்றும் இனி வரும் காலங்களில் இது போன்று நடைபெறாமல் இருக்க எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் உள்ள சுரங்கம், குவாரிகள், சாலைகள், கட்டுமானத் திட்டங்கள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு கேரள அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
மேலும், வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை பாடமாக எடுத்துக் கொண்டு, தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர்கள், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறை, தமிழ்நாடு வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட தீர்ப்பாயம், வழக்கின் அடுத்த விசாரணையை செப்டம்பர் 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.
இதையும் படிங்க: எல் நினோ Vs லா நினா.. வயநாடு நிலச்சரிவுக்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் என்ன?