சென்னை : எண்ணூர் அருகே இயங்கிவரும் கோரமண்டல் தொழிற்சாலையில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் திடீரென அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இந்த வாயுக்கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம் மற்றும் கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வு தாமாக முன்வந்து வழக்கை விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், அரசு சார்பில் அமைக்கப்பட்ட வல்லுநர்கள் குழுவானது பாதிக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்த பின்னர் தொழிற்சாலை உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும் உள்ளிட்ட 3 முக்கிய விதிகளை பரிந்துரை செய்துள்ளது. இந்த வல்லுநர்கள் குழு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பல்வேறு தகவல்களை சேகரித்த பின் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இத்தகைய அறிவுறுத்தல்களை பின்பற்றினால் தொழிற்சாலையை மீண்டும் திறக்க அரசு அனுமதி அளிக்கும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கோரமண்டல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசின் பரிந்துரைகளை பின்பற்ற தயாராக இருப்பதாகவும், ஆனால் சில அறிவுறுத்தல்களை பின்பற்றுவதில் நடைமுறை சிக்கல் இருப்பதால், தொழிற்சாலை அமைக்கும் வல்லுநர்கள் குழுவுடன் அரசு அமைத்த வல்லுநர்கள் குழுவுடன் சேர்ந்து மீண்டும் ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டுமெனவும் தற்போது பாதிக்கப்பட்ட குழாய் அருகில் மக்கள் போராட்டம் நடைபெறுவதால் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் அரசு வல்லுநர்கள் குழு உடன் தங்கள் குழு சேரந்து ஆய்வு செய்த பிறகு தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதையடுத்து, அரசின் வல்லுநர் குழு அளித்த அறிவுறுத்தல்களில் எதை பின்பற்ற முடியாது? ஏன் பின்பற்ற முடியாது? என உரிய விளக்கத்துடன் தொழிற்சாலை ,அரசிடம் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், மாசுக்கட்டு வாரியம் விதித்த பரிந்துரையை கோரமண்டல் நிறுவனம் கடைபிடிக்க வேண்டுமெனவும் மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டுமாறும் மீண்டும் பாதிப்புகள் ஏற்படாமல் தொடர்ந்து கண்காணித்து வாரியத்தின் பரிந்துரையை கடைபிடித்து மீண்டும் செயல்பட கோரமண்டல் நிறுவனத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க :பணமோசடி வழக்கு: முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரருக்கு வழங்கிய ஜாமீன் ரத்து! - Money Fraud Case