சென்னை: கீழ்பவானி கால்வாய் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2.07 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த கால்வாய் 60 ஆண்டுகளுக்கு முன்பு மண்ணால் அமைக்கப்பட்டது. தற்போது கால்வாய் கரைகள் பழுதடைந்து நீர்க்கசிவு அதிகரித்துள்ளது.
கரையில் உடைப்பு ஏற்படுகிறது. கடைமடை பகுதி விவசாயிகளுக்கு நீர் சென்று சேர்வதில்லை என்பதால், தமிழ்நாடு அரசு கீழ் பவானி கால்வாயை நவீனப்படுத்த திட்டமிடப்பட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. கீழ் பவானி கால்வாய் சீரமைப்பு வேலைகள் செய்ய பொதுமக்கள் கருத்துக் கேட்பு நடத்த வேண்டும், மரங்கள் வெட்டப்படுகிறது, முறையான சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை. எனவே, இந்த திட்டத்தை நிறுத்த உத்தரவிட வலியுறுத்தி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வு விசாரித்து வந்தது. இந்த நிலையில், இது தொடர்பாக தென் மண்டல பசுமை தீர்ப்பாய அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.
அதன்படி, “கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணிகள் ஏற்கனவே உள்ள பழைய பாசன அமைப்பை சீரமைக்கும் திட்டம். இது புதிய திட்டம் இல்லை என்பதால், இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. மேலும், மரங்களை வெட்டுவதற்கு முறையாக பசுமைக் குழுவின் அனுமதி பெறப்பட்டுள்ளது. ஆகையால், அரசு தொடர்ந்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளலாம்” என தீர்ப்பளித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.
இதையும் படிங்க: சிறுவாணி அணை விவகாரம்; கேரள அரசுக்கு எஸ்.பி.வேலுமணி கண்டனம்!