எதிர்பார்க்காத நிகழ்வுகளுடன் நெல்லையில் களைகட்டிய நரிக்குறவர்கள் திருவிழா! - Nellai Narikuravar Festival - NELLAI NARIKURAVAR FESTIVAL
Narikuravars Thiruvizha: நெல்லையில் உள்ள நரிக்குறவர் காலனியில் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு கோடி ரூபாய் செலவில் வெகு விமரிசையாக நடைபெற்ற அட்டகாளியம்மன் கோயில் திருவிழாவின் கொண்டாட்டத்தை இந்த தொகுப்பில் காணலாம்.
Published : May 28, 2024, 8:46 PM IST
திருநெல்வேலி: நெல்லையில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் நரிக்குறவர் காலனி அமைந்துள்ளது. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் மக்கள் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் பொருளாதார தேவைக்காக தற்காலிகமாக மதுரை, சிவகங்கை, திருப்பத்தூர், திண்டுக்கல், அறந்தாங்கி, அருப்புக்கோட்டை, திண்டிவனம், தஞ்சாவூர் என பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
ஒன்றிணைக்கும் திருவிழா: இவ்வாறு இந்த இடத்தை விட்டுச் சென்றவர்கள், அங்கு நடக்கும் அட்டகாளியம்மன் கோயில் திருவிழாவிற்கு ஒன்று கூடுவது வழக்கம். எனவே, 20 நாட்களுக்கு முன்பாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நரிக்குறவர்கள் வரத்தொடங்கினர். இதனால் எம்.ஜி.ஆர் காலனியில் நரிக்குறவர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திருவிழா நடைபெற உள்ளதால், அம்மக்கள் பெரும் மகிழ்ச்சியுடன் திருவிழாவில் கலந்து கொண்டனர்.
ஆரவாரத்துடன் தொடங்கிய திருவிழா: விழாவின் தொடக்க நிகழ்வாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 26) பெருமாள் சாமிக்கு ஆண்கள் மட்டும் சிறப்பு வழிபாடு செய்தனர். இதில் மண்பானையில் பொங்கலிட்டும், வெள்ளாடுகளை பலி கொடுத்தும் வயிறார உண்டு மகிழ்ந்தனர். பலி கொடுத்த எருமை மற்றும் வெள்ளாடுகளுக்கு தீபாராதனை நடத்திய பின்னர், அவற்றை அறுத்து சாமிக்கு படையல் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மாவிளக்கு ஏற்றி மைதா, ரவை, சீனி போன்றவற்றின் கலவையில் ரொட்டி சுட்டு படையலிட்டனர்.
பலியிட்டு சாமி வழிபாடு: இந்நிலையில், இன்று காலை மதுரை மீனாட்சி மற்றும் கருப்பசாமிக்கு வெள்ளாடுகளையும், அட்டகாளியம்மனுக்கு எருமை கடாக்களையும் பலி கொடுத்து வழிபாடு செய்தனர். மேலும், பலி கொடுத்த விலங்குகளின் ரத்தத்தை கோயில் முன்பாக தோண்டப்பட்டிருந்த குழியில் சேகரித்தனர். பின், அதில் சாமியின் திருவுருவத்தை வைத்து அபிஷேகம் செய்தனர்.
பின் அபிஷேகம் செய்யப்பட்ட ரத்தத்தை உடல் முழுவதும் பூசிக் கொண்டனர். அப்போது, சிறுவர்கள் உள்பட பலர் இடுப்பில் சலங்கை மற்றும் பாவாடை கட்டிக்கொண்டு ஆக்ரோஷமுடன் சாமியாடினர். இறுதியாக பலி கொடுத்த எருமைக்கடா மற்றும் வெள்ளாடுகளின் குருதியை குடித்து மகிழ்ந்தனர் .
இதனைத் தொடர்ந்து, நாளை பலி கொடுத்த எருமைக்கடா மற்றும் வெள்ளாடுகளின் ரத்தக் கலவையுடன் துண்டாக்கப்பட்ட தலைகளை தாம்பூலத்தில் வைத்து பெண்கள் முளைப்பாரி எடுப்பர். பின், ஆடல் பாடலுடன் நிகழ்ச்சியுடன் ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது.
திருவிழாவும், கலாசரமும்: இந்த திருவிழா நரிக்குறவர்களின் குலத்தொழிலான வேட்டையாடி விருந்துண்ணும் கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. இதனால்தான் திருவிழாவின் முதல் நாளிலும், கடைசி நாளிலும் வேட்டையாடும் கருவிகளை வைத்து வழிபாடு செய்கின்றனர்.
ஏழு ஆண்டுகளுக்குப் பின் இந்த திருவிழா நடைபெறுவதால், இத்திருவிழாவிற்கு 2 கோடி ரூபாய் வரை பணம் செலவு செய்துள்ளதாகவும், இந்த திருவிழாவிற்காக 10 மாவட்டங்களில் இருந்து மக்கள் கலந்து கொண்டதாகவும் விழாவில் பங்கேற்ற ஒருவர் கூறினார்.
இத்திருவிழாவில் நரிக்குறவர்கள் எருமைக்கடா மற்றும் ஆடுகளை பலி கொடுப்பது வழக்கம் என்பதால், திருவிழாவிற்கென சில நாட்களுக்கு முன்பாகவே 47 எருமைக்கடாக்கள் மற்றும் வெள்ளாடுகளை விலை கொடுத்து வாங்கி, வீடுகளில் வளர்த்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பக்தர்கள் பரவசம்!