மதுரை: மதுரை கே.கே.நகர் பகுதியில் எலக்ட்ரிக்கல் மெக்கானிக்கின் வீட்டில் போதைப்பொருள் பதுக்கப்பட்டு உள்ளதாக வந்த தகவலை அடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்தவர் தமிமுன் அன்சாரி(59). இவர் பழைய எலெக்ட்ரானிக் பொருட்களை சர்வீஸ் செய்யும் தொழிலை செய்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, மதுரை கே.கே.நகர் வித்யா காலனி அருகேயுள்ள அய்யனார்கோயில் 2வது தெருவில், வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார்.
இந்நிலையில், இவரது வீட்டில் உயர்தர போதைப்பொருட்களைப் பதுக்கி வைத்திருப்பதாகக் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று (பிப்.23) காலை முதல் இரவு 7.30 மணிவரை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினர், காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து, போதைப்பொருள் பதுக்கலில் ஈடுபட்டதாக, சந்தேகத்தின் அடிப்படையில் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும், தமிமுன் அன்சாரியின் வீட்டிலிருந்து பவுடர் வடிவில் சுமார் 10 கிலோ மதிப்பிலான யூரியா மற்றும் மெத்தாம்பேட்டமைன் என சந்தேகிக்கக்கூடிய பொட்டலங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் பவுடர் வடிவிலான மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருள் உள்ளதா? அல்லது வேறு வகையான போதைப்பொருள் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்வதற்காகப் பறிமுதல் செய்யப்பட்ட மாதிரியானது, சென்னையில் உள்ள பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த பரிசோதனை முடிவின் அடிப்படையில், தமிமுன் அன்சாரியிடம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினர் விசாரணை நடத்த உள்ளனர். மேலும் முதற்கட்ட விசாரணையில், தமிமுன் அன்சாரியின் வீட்டில் சென்னையைச் சேர்ந்த அன்பு என்ற நண்பர் மதுரைக்கு வந்தபோது, அட்டைப்பெட்டி ஒன்றை ரசாயனப்பொருள் எனக்கூறி வைத்துச் சென்றதாகத் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, சென்னையில் உள்ள அன்பு என்பவரிடம் விசாரணை நடத்தவும், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த பதுக்கல் சம்பவத்தில் தமிமுன் அன்சாரிக்கு தொடர்பு உள்ளதா? இவ்விவகாரத்தில் தொடர்புடைய வேறு நபர்கள் யாரேனும் உள்ளனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்துவதற்காக அவரை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை படிங்க: தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் சுதீஷின் மனைவியிடம் ரூ.43 கோடி மோசடி.. நடந்தது என்ன?