நாமக்கல்: ராசிபுரம் அடுத்த தாத்தையங்கார்பட்டியைச் சேர்ந்தவர் சின்னண்ணன்(54). இவர் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகின்றார். மேலும் இவருக்கு கீதா(42) என்பவருடன் திருமணமாகி 9 வயதில் ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓட்டுநர் சின்னண்ணன் எல்பிஜி (LPG) டேங்கர் லாரியை ஓட்டுவதற்காக சென்றுள்ளார். அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால், சின்னண்ணன் கர்நாடகா மாநிலம் உத்தர கன்னட பகுதியில் சாலையோரத்தில் வழக்கமாக டீ குடிக்கும் ஒரு கடையில், டீ குடிப்பதற்காக லாரியை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அப்போது, திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் டேங்கர் லாரி அடித்துச் சென்ற நிலையில், ஓட்டுநரும் லாரியுடன் அடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே காற்றாற்று வெள்ளத்தில் LPG டேங்கர் லாரி அடித்துச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, சின்னண்ணன் மனைவி கீதாவுக்கு, காற்றாற்று வெள்ளத்தில் சின்னண்ணன் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சின்னண்ணன் குடும்பத்தினர் கதறி அழும் காட்சி ஒட்டுமொத்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கீதா, "இதுதொடர்பாக நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு தான் எங்களுக்கு தகவல் வந்தது. ஆனால், இரவு 10 மணி அளவில் தான், எனது கணவர் உயிரிழந்ததாகும் அவரது உடலை கைப்பற்றியதாகவும் தெரிவித்தனர்.
அவர் கடந்த திங்கட்கிழமை தொலைப்பேசியில் அழைத்துப் பேசிய போது, ஆகஸ்ட் மாதம் வீட்டிற்கு வருவதாகத் தெரிவித்திருந்தார். தற்போது தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர தமிழ்நாடு அரசு உதவிட வேண்டும். மேலும், தனது மகன் படிப்பு செலவிற்கு அரசு உதவி செய்ய வேண்டும்" என தமிழக அரசுக்கு கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர் கூறுகையில், "லாரி ஓட்டிச் செல்லும் போது, வழக்கமாக அந்த கடையில் தான் டீ குடிக்க லாரியை நிறுத்துவோம். மழை நேரங்களில் இதுபோன்று அடிக்கடி நிகழ்கிறது. அப்பகுதியில் தான் தமிழ்நாட்டில் இருந்து செல்லுபவர்களுக்குத் தேவையான பொருட்கள் எல்லாம் கிடைக்கும். மழை அதிகமாக பெய்வதால், மண் சரிவு ஏற்பட்டிருக்கும். அப்பகுதியில் அதிக உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள அறிக்கையில், "உத்தர கன்னட மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 3 நாமக்கல் லாரி ஓட்டுநர்களின் நிலை குறித்து அம்மாவட்ட ஆட்சியரிடம் கேட்டறிந்ததாகவும், உயிரிழந்த சின்னண்ணனின் உடலைத் தமிழ்நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும்" தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மழைக்காலத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரிக்குமா? எவ்வாறு நாம் தற்காத்துக்கொள்வது?