நாமக்கல்: நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்கும் போக, மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில், முட்டைக்கான கொள்முதல் விலையை நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் "தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு" தினசரி நிர்ணயம் செய்து வருகிறது.
அதன்படி இன்று நடந்த முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 75 காசுகளில் 5 காசுகள் உயர்ந்து 5 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சென்னையில் முட்டை ஒன்று 6 ரூபாய் 50 காசுகள் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்த சூழலில், நாமக்கல் மண்டலத்தில் இந்த மாதம் துவக்கத்தில் இருந்து இன்றுவரை, அதாவது 18 நாட்களில் முட்டை கொள்முதல் விலை 1 ரூபாய் 50 காசுகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது. முட்டையின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஓட்டல்களில் முட்டை சார்ந்த உணவுப்பொருட்களின் விலை உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க: எப்போது காபி குடிக்கலாம்.. மருத்துவர் கூறுவது என்ன? - Causes Of Drinking Coffee Tea