சென்னை: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக நடந்து வருகிறது. மற்றொரு புறம் தேர்தல் அதிகாரிகள் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்படும் நபர்கள், பணப்பட்டுவாடா உள்ளிட்டவற்றைத் தடுக்க தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த 6ஆம் தேதி சென்னை அடுத்த தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்த திருநெல்வேலி விரைவு ரயிலில், தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் தாம்பரம் போலீசார் இணைந்து சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது, ரயிலில் சந்தேகத்திற்கிடமான மூன்று நபர்களிடமிருந்து ரூ.4 கோடியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் கொண்டு வந்த சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ப்ளூ டைமண்ட் ஹோட்டலில் இருந்து பணம் கொண்டுவரப்பட்டதாகவும், இது நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான பணம் எனவும், தேர்தலில் பணப்பட்டுவாடா செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதாகவும் வாக்குமூலம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட தாம்பரம் போலீசார், இதுதொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டல் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அதையடுத்து, கடந்த 12ஆம் தேதி சென்னை அபிராமிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பாஜக நிர்வாகி கோவர்தனுக்குச் சொந்தமான ஒரு உணவகத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கணக்கில் வராத ரூ.1 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், தாம்பரம் ரயில் நிலையத்தில் போலீசார் கைப்பற்றப்பட்ட 4 கோடியில், ஒரு கோடி ரூபாய் அந்த உணவகத்தில் வைத்துக் கைமாற்றப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பாஜக மாநில தொழில் துறை தலைவர் கோவர்தனை விசாரணைக்கு ஆஜராகும்படி தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பினர்.
ஆனால், கோவர்தனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவரது மகன் கிஷோரை விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன் அடிப்படையில் நேற்று இரவு கோவர்தன் மகன் கிஷோர் தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகினார். அப்போது, கிஷோரிடம் சுமார் 3 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
அந்த விசாரணையில், "கடந்த மாதம் 28ஆம் தேதியிலிருந்து தங்களது உணவகத்தில் சிசிடிவி காட்சிகள் எதுவும் வேலை செய்யவில்லை எனவும், நான் வேலை சம்பந்தமாகக் கடந்த 3ஆம் தேதி முதல் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்திருந்ததாகவும், கடந்த 10ஆம் தேதி தான் வீட்டிற்கு வந்ததாகவும், தங்களது உணவகத்தில் பணம் கை மாற்றியது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது எனவும், இதற்கும் எங்கள் குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும்" தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து அவர் தெரிவித்துள்ள வாக்குமூலத்தைத் தாம்பரம் போலீசார் வீடியோ செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக, நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை வரும் 22ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.