தஞ்சாவூர்: கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது, இளைஞர்களிடையே ஏற்பட்ட தகராறை விலக்க சென்ற கல்லூரி மாணவரை கத்தியால் தாக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து நாச்சியார் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து, கத்தியால் தாக்கியவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கும்பகோணம் அருகே, நாச்சியார் கோவில் காவல் சரகம் மாத்தூர் பகுதியில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இளைஞர்கள் கிரிகெட் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்பொழுது, அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி தகராறாக மாறிய நிலையில், அங்கு விளையாடிக் கொண்டிருந்த அப்பகுதியை சேர்ந்த இளைஞர் சாம்சன்ராஜ் (22) அவர்களை விலகி விடுவதற்காக சென்றுள்ளார்.
இந்த தகராறில் போதையில் இருந்த சுரேந்திரன் என்பவர், தனது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாம்சன்ராஜை தாக்கியுள்ளார். இதில், அவரது இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாச்சியார் கோவில் போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து, போதையில் கத்தியால் தாக்கிய சுரேந்திரனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சமீப நாட்களாக நாச்சியார் கோவில் பகுதியில் போதை பொருள்கள் விற்பனை மற்றும் பயன்பாடு அதிகரித்துள்ளது என பொது மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை மற்றும் மாத்தூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் சார்லஸ் கூறியதாவது,” இது போன்ற நிலைமை எவருக்கும் ஏற்படக்கூடாது. போதைப்பொருள்களை ஒழிப்பதில் காவல்துறை மற்றும் தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.
திமுக நிர்வாகி மகன் கத்தி குத்து பட்டது குறித்து தகவல் அறிந்த திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்து கிருஷ்ணன், மாநில அம்மா பேரவை இணை செயலாளர் ஏவிகே அசோக்குமார், கும்பகோணம் முன்னாள் எம்எல்ஏ இராம இராமநாதன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், சாம்சன்ராஜை மருத்துவமனைக்கு வந்து சந்தித்து ஆறுதல் கூறினர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தக்காளி சாஸில் நெழிந்த புழுக்கள்.. நடிகர் விஜய் விஷ்வா ஆவேசம் - வீடியோ வைரல் - Actor Vijay Vishwa