சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய், நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழகம் முழுக்க தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கடந்தாண்டு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
அதுபோல, இந்தாண்டும் மாநிலத்தில் தொகுதி வாரியாக முதல் மூன்று மதிப்பெண்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது.
'மாணவர்கள் அரசியலையும் தேர்ந்தெடுங்கள்' - தவெக தலைவர் விஜய்
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) June 28, 2024
#விஜய் #தவெக #TVK #TVKVijay #vijay #ThalapathyVijayStudentsMeet #etvbharattamil @actorvijay @tvkvijayhq #VijayHonoursStudents pic.twitter.com/6hmbUvgWuB
'விஜய் கல்வி விருதுகள்' என்ற பெயரில் நடக்கும் இந்த விழா, இம்முறை இரண்டு பகுதிகளாக நடக்கிறது. இன்று நடந்த விழாவில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,500 மாணவர்களில் இன்று முதல்கட்டமாக 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், அவர்களது பெற்றோர் பங்கேற்றுள்ளனர். இதேபோல, இரண்டாவது கட்டமாக ஜூலை 3ஆம் தேதி விழா நடக்கவுள்ளது.
முன்னதாக, இன்று நடைபெற்ற விழாவில் விஜய் ஒரு அரசியல் கட்சித் தலைவராக சூடான கருத்துக்களை வைப்பார் என அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்பட்டது. அதன்படியே, விஜய் ''இங்கு நல்ல தலைவர்கள்தான் அதிகம் தேவை, நான் இதனை அரசியல் ரீதியாக சொல்லவில்லை. ஒரு துறையில் சிறந்து விளங்க வேண்டும், எதிர்காலத்தில் அரசியலும் கரியரில் ஒரு தேர்வாக இருக்க வேண்டும். நன்கு படித்தவர்கள் நல்ல தலைவர்களாக வர வேண்டும். படிக்கும் போது மறைமுகமாக அரசியலில் ஈடுபட வேண்டும்'' என கூறினார்.
மேலும், போதை பழக்கத்தை பற்றிய விழிப்புணர்வு குறித்தும் பேசினார். அப்போது, ஆளுங்கட்சியை நேரடியாக விமர்சிக்காத விஜய், ''அரசை குறை சொல்வதைக் காட்டிலும் நம்மை நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்'' என்றார். பின்னர், மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகையையும், சான்றிதழ்களையும் வழங்கினார். இந்த நிலையில், விஜய்யின் இந்த முயற்சிக்கு நாம் தமிழர் கட்சியின் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். தற்போது அது கவனம் பெற்றுள்ளது.
சீமான் வாழ்த்து: சீமான் தனது அதிகாரபூர்வ எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது; '' கல்வி என்பது மானுட உரிமை! அதைக் கொடுக்க மறுப்பது மாபெரும் கொடுமை; கல்வியை அனைவருக்கும் தரமாக, சரியாக, சமமாக வழங்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமை! ஆனால், தற்காலச்சூழலில் கல்வி என்பது தனியார் மயமாக்கப்பட்டு, மதிப்புக்கூட்டப்பட்ட விற்பனை பண்டம்போல, கல்விக் கட்டணம் என்ற பெயரில் பெரும் பகற்கொள்ளை நடக்கின்றது.
கல்வி என்பது மானுட உரிமை! அதைக் கொடுக்க மறுப்பது மாபெரும் கொடுமை; கல்வியை அனைவருக்கும் தரமாக, சரியாக, சமமாக வழங்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமை!
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) June 28, 2024
ஆனால், தற்காலச்சூழலில் கல்வி என்பது தனியார் மயமாக்கப்பட்டு, மதிப்புக்கூட்டப்பட்ட விற்பனை பண்டம்போல, கல்விக் கட்டணம் என்ற…
‘பணம் படைத்தவர்களால் மட்டுமே தரமான கல்வியைப் பெற முடியும், ஏழைகளுக்கு நல்ல கல்வி என்பது எட்டாக்கனி’ எனும் ஏற்றத்தாழ்வு மிகுந்த சமகாலத்தில், ஏழை - பணக்காரர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ - மாணவியரை அழைத்து, பாராட்டுச் சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும், என்னுயிர் இளவல், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், என் அன்புத்தளபதி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!'' என இவ்வாறு சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: போதைக்கு எதிராக உறுதிமொழி எடுக்க வைத்த நடிகர் விஜய்.. கல்வி விருது வழங்கும் விழாவில் நெகிழ்ச்சி!