சென்னை: திருச்சி புறநகர் எஸ்பி வருண்குமார் மற்றும் நாம் தமிழர் கட்சி இடையேயான பிரச்னை குறித்து சென்னை சின்ன போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில், இன்று அக்கட்சி வழக்கறிஞர் பாசறை சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் சங்கர், மத்திய சென்னை மண்டலச் செயலாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துப் பேசினர்.
அப்போது பேசிய ஸ்ரீதர், “திருச்சி புறநகர் எஸ்பி வருண்குமார் தரப்பிலிருந்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அனுப்பப்பட்ட வழக்கறிஞர் நோட்டீஸுக்கு, எங்கள் வழக்கறிஞர் பாசறை நிர்வாகி சேவியர் பெலிக்ஸ் தரப்பிலிருந்து பதில் அளிக்கப்பட்டது. ஆனால், அந்த பதில் நோட்டீஸ் சீமானின் அனுமதியின்றி அளிக்கப்பட்டதால், அதற்கும் நாதகவும் எந்த தொடர்பும் இல்லை.
இதனால் சேவியர் பெலிக்ஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேநேரம், திருச்சி எஸ்பி வருண்குமார் தனிப்பட்ட வகையில் நாம் தமிழர் கட்சிக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். குறிப்பாக, தொடர்ந்து பல்வேறு வழக்குகளை நாதகவினர் மீது அவர் பதிவு செய்து வருகிறார்.
தமிழகத்தில் எந்த காவல்துறை அதிகாரியிடமும் நாதக மோதல் போக்கை கடைபிடிக்கவில்லை. ஆனால், வருண் எஸ்பி உடன் மட்டும் மோதல் உருவாகிறது என்றால், யார் பிரச்னையை உருவாக்குகிறது என சிந்தித்துப் பாருங்கள். வருண் எஸ்பி காவல் நிலையத்தில் வேலை செய்ய வேண்டும், டிவிட்டரில் நாம் தமிழருக்கு எதிராக வேலை செய்யக்கூடாது.
இதை அவர் திமுகவின் தூண்டுதலின் பேரில்தான் செய்கிறார். எங்கள் மீது சாதிய ரீதியான குற்றச்சாட்டை அவர் முன் வைக்கிறார். ஆனால், அவர்தான் அப்படி நடந்து கொள்கிறார் என நாங்கள் குற்றம் சாட்டுகிறோம். இல்லையென அவர் நிரூபிக்கட்டும். இந்தப் பிரச்னைக்கு வருண் ஐபிஎஸ் தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அவர் ஒரு மாத காலம் அமைதியாக இருந்தால் பிரச்னை முடியும். அதேநேரம், அவர் எடுக்கும் எந்த நடவடிக்கையாக இருந்தாலும் சட்டப்படி எதிர்கொள்ள நாதக தயார்” எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: நில அபகரிப்பு; திருப்பத்தூர் திமுக எம்எல்ஏ மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்!