கரூர்: நாடாளுமன்ற மக்களைவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதன் சூழலில், தமிழகத்தை பொருத்தமட்டில், திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் கூட்டணிகள் மற்றும் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி உள்ளது. இதன் காரணமாக, அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கி, வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் மார்ச் மாதம் 27ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. இந்த நிலையில், அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யத் தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில், கரூர் நாடாளுமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் கருப்பையா கரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மீ.தங்கவேலிடம் தனது வேட்புமனுவினை இன்று (மார்ச் 25) தாக்கல் செய்தார். இதன் பின்னர் உறுதிமொழி படிவத்தில் கையொப்பமிட்டு, தேர்தல் அதிகாரி முன்பு உறுதிமொழி வாசகத்தை வாசித்து, தேர்தல் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டார்.
இதற்கு முன்னதாக நாம் தமிழர் கட்சி சார்பில் கரூர் ஜவகர் பஜார் காமராஜர் சிலை முன்பு துவங்கி, லைட் ஹவுஸ் கார்னர், தான்தோன்றி மலை, அரசு கலைக் கல்லூரி வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கருப்பையா வாக்கு சேகரித்து ஊர்வலமாக வருகை தந்தார்.
இதனைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள என் ஓட்டு என் உரிமை எனும் வாசகங்கள் அடங்கிய வாக்காளர் விழிப்புணர்வு பதாகை முன்பு செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த நிகழ்வின்போது , நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர், மாநில கொள்கை பரப்பு செயலாளர், புதுக்கோட்டை கிழக்கு மாவட்டச் செயலாளர், திருச்சி மேற்கு மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: "காவிரி உபரி நீர் திட்டத்தைச் செயல்படுத்துவது எனது முதல் குறிக்கோள்" - சௌமியா அன்புமணி! - Sowmiya Anbumani Filing Nomination