தூத்துக்குடி: கோவில்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவரது மகன் வெள்ளத்துரை(50). இவர் கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்கா நுழைவு வாயிலில் மீன் கடை நடத்தி வந்துள்ளார். இரவில் மீன் கடையில் வெள்ளத்துரை தூங்குவது வழக்கம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல வெள்ளத்துரை கடையில் தூங்கியிருந்த நிலையில், நள்ளிரவில் சில மர்ம நபர்கள் வெள்ளத்துரை மற்றும் அவருடன் இருந்த சாமி என்பவரையும் வெட்டிவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
இதில் சாமி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெள்ளத்துரையை 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். இதனையடுத்து இவரின் உடல்களும் உடற்கூறாய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்களும் ஆய்வு செய்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை.. தூத்துக்குடியில் இளைஞர் போக்சோவில் கைது!