மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கீழமூவர்க்கரை மீனவர் கிராமத்தில் கடற்கரையில் சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரமுள்ள மர்மப் பொருள் கரை ஒதுங்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலறிந்து விரைந்து வந்த கடலோர போலீசார் கீழமூவர்க்கரை கடற்கரையில் ஒதுங்கிய மர்மப் பொருள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், அந்தப் பொருள் கடலில் தடை செய்யப்பட்ட பகுதி என்பதை அடையாளம் காண்பதற்காக மிதக்க விடும் பொருள் எனத் தெரிய வந்தது. இதை போயம் என்று அழைப்பதாகவும் கடலோர போலீசார் கூறுகின்றனர்.
இந்த பொருள் எங்கிருந்து அடித்து வரப்பட்டது எனப் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கடற்கரையில் ஒதுங்கிய மர்மப் பொருள் குறித்து கிராமத்தில் தீயாகப் பரவியதால் இந்த பொருளைக் காணப் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
இதையும் படிங்க: நயினார் நாகேந்திரன் நோட்டாவோடு தான் போட்டியிடுகிறார் - திமுக தலைமை செய்தித் தொடர்பாளர் விமர்சனம்! - Lok Sabha Election 2024