மதுரை: மதுரை தபால் தந்தி நகரைச் சார்ந்த கஸ்தூரி கலா என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "எனது மகன் கிருஷ்ணகுமார் பெங்களூருவில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். எனது மகன் மாதம் இருமுறை மதுரை வந்து செல்வார். எங்கள் வீட்டின் பாதுகாப்பு கருதி வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது.
இந்நிலையில், எனது வீடு அருகே வசித்து வரும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அமுதா, என் மகன் மீது கொடுத்த பொய்யான புகாரில், மதுரை தல்லாக்குளம் போலீசார் மகனை அழைத்து கடந்த ஜூலை 13ஆம் தேதியன்று விசாரணை செய்தனர். விசாரணை முடித்து வந்த எனது மகன், அடுத்த நாள் 14ஆம் தேதி வெளியே சென்றவன் வீடு திரும்பவில்லை. எனவே, எனது மகனை மீட்டு ஒப்படைக்க மதுரை மாநகர காவல்துறை ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜெகதீஸ் சந்திரா மற்றும் ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (ஜூலை 30) விசாரணைக்கு வந்தது. அப்போது மாயமானதாக கூறப்பட்ட ஐடி ஊழியர் கிருஷ்ணகுமாரை தல்லாக்குளம் போலீசார் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிபதியிடம் நேரில் ஆஜரான கிருஷ்ணகுமார், "என்னை யாரும் சட்டவிரோதமாக கடத்தவில்லை. நானாக தான் வெளியூர் சென்றேன். என் குடும்பத்திற்கு தகவல் சொல்லவில்லை. ஊடகங்களில் வந்த செய்தியைப் பார்த்து நேரடியாக நீதிமன்றத்திற்கு வந்து விட்டேன்" என தெரிவித்தார்.
பின்னர் காவல்துறை உதவி ஆணையர் வினோதினி நீதிபதியிடம் ஆஜராகி, "கிருஷ்ணகுமார் மாயமானது குறித்து எனக்கு எதும் தெரியாது. எவ்வித சட்ட விதிமீறல் முறைகளில் நான் ஈடுபடவில்லை. மனுதாரர் கூறியது போல் அவரது வீட்டையும் எனக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று யாரையும் வைத்து மிரட்டவில்லை" என்று பதிவு செய்தார். இருதரப்பு சாட்சியங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், மாயமானதாக கூறப்பட்ட ஐடி ஊழியர் கிருஷ்ணகுமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விட்டதால் இந்த வழக்கை முடித்து வைப்பதாக கூறி உத்தரவு பிறப்பித்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: புதுக்கோட்டையில் நடைபெற்ற கடைசி நகர்மன்ற கூட்டம்.. ஏன் தெரியுமா? - Pudukottai municipal corporation