ஈரோடு: கொல்லம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. மீன் வியாபாரியான இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார். இதைத் தொடர்ந்து திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மீன் கடை நடத்தி வரும் சத்தியமூர்த்தி கொல்லம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி பள்ளி சுற்றுச் சுவர் அருகே விடுமுறை தினமான நேற்று மீன் வியாபாரம் செய்து கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அந்த வழியாக இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென வாகனத்தை நிறுத்தி விட்டு சத்தியமூர்த்தியை அரிவாளால் வெட்ட முயன்றனர். இதையடுத்து சுதாரித்து தப்பியோட முயன்ற சத்தியமூர்த்தியை துரத்தி சென்று மர்ம கும்பல் வெட்டியதில் கழுத்து பகுதியில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அப்பகுதியினர் கூச்சல் சத்தம் கேட்டு மர்ம கும்பல் வாகனத்தில் தப்பியோடினர்.
இதனையடுத்து பலத்த காயமடைந்த சத்தியமூர்த்தியை மீட்டு அப்பகுதி மக்கள் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இதற்கிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு தெற்கு காவல் நிலைய போலீசார், சத்தியமூர்த்தியின் உடலில் வெட்டப்பட்ட இடங்களை பார்வையிட்டு, சம்பவ இடத்தில் கிடந்த ரத்த மாதிரியை சேகரித்தனர்.
பின்னர் அப்பகுதி மக்களிடம் மர்ம நபர்கள் அடையாளங்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைதொடர்ந்து சத்தியமூர்த்தியை கள்ளக்காதல் விவகாரத்தில் வெட்டப்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. பட்டப் பகலில் மீன் வியாபாரி மர்ம கும்பலால் துரத்தி சென்று வெட்டப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: அடிப்படை வசதிகள் இல்லாமல் குடியிருப்பு விற்பனையா? குமுறும் குடியிருப்புவாசிகள்! என்ன பிரச்சினை?