திருவாரூர்: முத்துப்பேட்டை பகுதியில் 50 ஹெக்டேர் பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள அலையாத்தி காடுகளில், ‘தமிழ் வாழ்க’ எனும் சொற்களின் வடிவில் வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது. 9 ஹெக்டேர் பரப்பில் 3 ஆயிரத்து 962 மீட்டர் நீளத்தில் இந்த வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.
அலையாத்திக் காடுகள்: தமிழ்நாட்டில் மிகப்பெரிய அலையாத்திக் காடுகள் அமையப்பெற்ற இடம் முத்துப்பேட்டை. அலையாத்தி தாவரம் கடற்கரை ஓரங்களில் உள்ள சேறு கலந்த சதுப்பு நிலங்களிலும், உவர் நீரில் வளரக்கூடியது. பல்வேறு நீர்வாழ் உயிரினங்களின் உற்பத்தி இடமாகவும், கடற்கரையோர பகுதிகளுக்கு பாதுகாப்பு அரணாகவும் சதுப்பு நிலக்காடுகள் அமைந்துள்ளன. தற்போது ஏற்பட்டு வரும் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் கால நிலை மாற்றத்தினை சீர் செய்வதில் அலையாத்திக் காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆனால், அவ்வப்போது ஏற்படும் சுனாமி, புயல் போன்ற இயற்கை சீற்றங்களை தாங்கி, இயற்கை அரணாக விளங்கி வருவதால் பெரிதாக பாதிப்படைகின்றன. எனவே, வனத்துறை மூலம் முத்துப்பேட்டை வனப்பகுதியில் அலையாத்திக் காடுகளை உருவாக்குவதற்கும், புனரமைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன.
முத்துப்பேட்டையில் உள்ள ஈரநில சூழல் அமைப்பு மொத்தம் 12 ஆயிரத்து 20 ஹெக்டர் பரப்பளவில் உள்ளது. இந்த நிலப்பரப்பில் தகுதியான இடங்களில் வனத்துறை மூலம் மீன்முள் வடிவத்தில் மெயின் மற்றும் கிளை வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு, வாய்க்கால்களின் ஓரத்தில் அலையாத்திச் செடிகள் நடவு செய்யப்பட்டு இந்த அலையாத்திக் காடுகள் உருவாக்கப்பட்டுள்ளது.
வாய்க்கால்களின் ஒரு பகுதியில் உவர் நீரும் மற்றொரு பகுதியிலிருந்து ஆற்று நீரும் கலக்கப்பட்டு, கடல்நீரின் உவர் தன்மையினை குறைத்து அலயாத்திக்காடுகள் உருவாக வகைசெய்யப்படுகிறது. கடந்த 2022 - 23 மற்றும் 2023 - 24 ஆகிய ஆண்டுகளில் சுமார் 1700 ஹெக் பரப்பளவில் TBGPCCR NABARD மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கம் ஆகிய திட்டங்களின் கீழ், அலையாத்திக் காடுகள் தோட்டங்கள் எழுப்பப்பட்டும் புனரமைக்கப்பட்டும் உள்ளன.
2023-2024 ஆம் ஆண்டில் NABARD திட்டத்தின் கீழ் 50 ஹெக் நிலப்பரப்பில் துறைக்காடு பகுதியில் அலையாத்திக் காடுகள் உருவாக்கப்படும் போது பொதுவாக வடிவமைக்கப்படும் மீன்முள் வடிவ வாய்க்காலை தவிர, தமிழ் மொழிக்கு பெருமை சாற்றும் வகையில் சுமார் 9 ஹெக் பரப்பளவில் தமிழ் வாழ்க எனும் சொற்களின் வடிவில் வாய்க்கால்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 555 மீ நீளம் மற்றும் 152 மீ உயரத்தில் தமிழ் வாழ்க எனும் வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பில் ஒவ்வொரு எழுத்தும் சராசரியாக 130 மீ உயரத்திலும் 65 மீ அகலத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் வாழ்க எனும் வடிவமைப்பின் மொத்த வாய்க்கால்களின் நீளம் 3,962 மீ ஆகும். இந்த வாய்க்கால்களில் Avicennia marina எனப்படும் கருங்கண்டல் வகையான அலையாத்தி செடிகள் நடப்பட்டுள்ளன. அடுத்து 3 முதல் 5 வருடங்களில் மொத்தம் 50 ஹெக் நிலப்பரப்பில் அலையாத்திக் காடுகள் உருவாகி வரும்போது அதில் உள்ள இந்த தமிழ் வாழ்க எனும் அமைப்பு மிகவும் தனித்துவமான தோட்டமாக உருவாக வாய்ப்புள்ளது.
இந்த தமிழ் வாழ்க எனும் வடிவமைப்பினை, அன்வர்தீன் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை திட்ட இயக்குநர் காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டம் TBGPCCR சதீஷ் தலைமை வனப்பாதுகாவலர் திருச்சிராப்பள்ளி மண்டலம் மற்றும் ஸ்ரீகாந்த் மாவட்ட வன அலுவலர் திருவாரூர் வனக்கோட்டம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி முத்துப்பேட்டை வனச்சரக அலுவலர் மற்றும் வனவர் ஆகியோரின் சீறிய முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: கட்சியில் சேர்ந்து 6 மாசமாச்சு.. அண்ணே சரிதானே? - மேடையில் ஓப்பனாக பதவி குறித்து பேசிய விஜயதாரணி!