தஞ்சாவூர்: தோற்போம் என உறுதியாகிவிட்ட நிலையில், மோடி அருவருக்கத்தக்க பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கிறார் என தஞ்சாவூரில் இன்று (ஜூன் 1) நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், தஞ்சாவூர் மாவட்ட குழு நிர்வாகி பக்கிரிசாமி எழுதிய நூலின் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு நூல்களை வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பிரதமர் மோடி எத்தனை கிலோமீட்டர் பயணம் செய்தார், எத்தனை பொதுக்கூட்டங்கள் பேசினார் என்பதை சாதனையாக ஊடகங்களில் வந்துள்ளது. ஆனால், கடந்த 10 ஆண்டு காலத்தில் என்ன சாதனை செய்தார் என எந்த இடத்திலும் கூறவில்லை.
2014, 2019ஆம் ஆண்டு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் எவையெல்லாம் நிறைவேற்றி இருக்கிறேன் என எந்த பிரச்சாரக் கூட்டத்திலும் அவர் பேசவில்லை. அதற்கு மாறாக, மக்களின் கவனத்தை திசை திருப்பக்கூடிய வகையில் மதம், சாதி ரீதியான பிரச்னைகளைப் பேசி வருகிறார்.
இதற்கு காரணம், தோற்போம் என உறுதியாகி விட்ட நிலையில் அருவருக்கத்தக்க பிரச்சாரத்தை மேற்கொண்டு இருக்கிறார். இந்தியா கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும் எனும் நம்பிக்கை உள்ளது, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் பிரதமர் கூறியதை ஊடகங்கள் கூறியுள்ளன, மோடியின் விருப்பத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள்.
தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகாவில் மேகதாது அணை, கேரளாவில் முல்லைப் பெரியாறு அணை கட்ட முடியாது. அது சாத்தியம் கிடையாது, அனுமதிக்கவும் மாட்டார்கள்” எனக் கூறியுள்ளார். இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ சின்னதுரை, முன்னாள் எம்எல்ஏ லாசர், நிர்வாகிகள் ஜீவக்குமார் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.