திருச்சி: வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 5 நாள்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை மாறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையில் பகல் நேரங்களில் வெப்ப அலை வீசக்கூடும்; பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில் கோடை வெயில் சுட்டெரித்து வருவதுடன் தொடர்ச்சியாக, 13 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி வெயிலின் வெப்பம் பதிவாகி வருகிறது.
தற்போது பருவமழை பொய்த்து விட்டதாலும், காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீரை பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் எந்த வித நடவடிக்கை மேற்கொள்ளாததாலும், நிலத்தடிநீர் செறிவூட்டலுக்கும் எந்த முயற்சியும் செய்யாததாலும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதற்கிடையே பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஏரிகள், குளங்கள், கிணறுகள் என அனைத்து நீர்நிலைகளும் வறண்டு காட்சியளிக்கின்றன. மேலும் விவசாயிகள், பொதுமக்கள், கால்நடைகள் மழை இல்லாததால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகத்தில் மழை வேண்டி இஸ்லாமிய அமைப்புகள் ஒன்று கூடி ஆங்காங்கே தொழுகைகள் நடத்தி வருகிறார்கள்.
இதனை கருத்தில் கொண்டு, திருச்சியில் உள்ள பாலக்கரை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் திருச்சி பாலக்கரை பிரபாத் திடலில் திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமாசபை தலைவர் முஹம்மது ரூருல் ஹக் ரஷாதி தலைமையில் 500-க்கும் மேற்பட்ட உலமாக்கள், ஆலிம்கள் மற்றும் இஸ்லாமிய பெருமக்கள் பங்கேற்று தமிழகத்தில் மழை பெய்து வளம் பெருக வேண்டி நபி வழியில் சிறப்பு தொழுகை நடத்தினர்.
இவ்வாறு நபி வழியில் தொழுகை செய்வதன் மூலம் நிச்சயம் மழை பொழியும் என்பது இஸ்லாமியர்கள் நம்பிக்கை ஆகும். சிறப்பு தொழுகையில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று அவர்கள் கைகளை உயர்த்தி, கண்ணீர் மல்க அனைவருக்காகவும் பிராத்தனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 30 கிலோமீட்டர் தூரத்தை 1 மணி 55 விநாடிகளில் ஸ்கேட்டிங் செய்து கடந்த 5 வயது சிறுமி! - Skating World Record