தூத்துக்குடி: தமிழ்நாடு ஒருங்கிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக கல்வி, பைத்துல்மால், வட்டி இல்லாத கடன், மகளிர் உதவும் சங்கம் ஆகியவை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று (பிப்.8) நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு இஸ்லாமிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் தலைமை ஏற்றிருந்தார். மேலும், சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் மாநில துணைத் தலைவரும், தமிழக ஜமாத் பைத்துல்மால் ஒருங்கிணைப்பாளருமான இதயத்துல்லா பங்கேற்றார்.
கருந்தரங்கிற்குப் பிறகு இதயத்துல்லா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "இந்தியாவில் அனைத்து சமுதாய மக்களும் முன்னேறினால்தான் நாடு முன்னேறியதாக அர்த்தம். மேலும், ஒவ்வொரு சமுதாய மக்களும் முன்னேற வேண்டும் என்பதே காந்தி மற்றும் அபுல் கலாம் ஆசாத்தின் கனவாகும்.
அதன் அடிப்படையில், அனைத்து சமுதாய மக்கள் கல்வி, பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்ற எண்ணத்தில், வட்டியில்லாத கடன் வழங்கும் அமைப்புகளை ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் உருவாக்கி வருகிறோம். அந்த வகையில், 2 ஆயிரத்து 500 பகுதிகளில் வட்டி இல்லாமல் கடன் வழங்கும் அமைப்பும், மகளிர் உதவும் சங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. அதனைத் தூத்துக்குடியில் கொண்டு வர வேண்டும் என்பதற்காக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "இடஒதுக்கீட்டை தீர்க்கமாக எதிர்த்தவர் முன்னாள் பிரதமர் நேரு" - பிரதமர் மோடி!
மேலும் பேசிய அவர், “தமிழகத்தில் வேலைவாய்ப்பில் முஸ்லீம்களுக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதனை 5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க பிசி, ஓபிசி பிரிவினருக்கு 47 வயதாக உயர்த்த வேண்டும். தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களாக முஸ்லீம் உள்ளிட்ட சிறுபான்மையினரை நியமிக்க வேண்டும்.
சமுதாயத்தில் பின்தங்கியுள்ள முஸ்லீம் மக்களின் முன்னேற்றத்திற்காக, ஹஜ் இல்லம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, ஹஜ் இல்லம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, அதற்குத் தேவையான இடத்தை தேர்வு செய்து, ஹஜ் இல்லம் அமைக்க வேண்டும். மேலும், நீட் தேர்வில் கிராமப்புற மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
தமிழக சிறைகளில் நீண்ட நாள்கள் இருப்பவர்களை விரைந்து விடுதலை செய்ய வேண்டும். தமிழக அரசுப் பணிக்கு, பொறியியல் பட்டதாரிகளை வேலைக்கு எடுக்க உள்ளது. அவர்களை டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான் அனைவருக்கும் சமமான வேலை வாய்ப்பு கிடைக்கும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கு; 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி!