சென்னை: தாம்பரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி பணம் தொடர்பாக நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராஜி விளக்கம் அளித்தார். இந்நிலையில், இது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
10 நாள் அவகாசம் கேட்ட நயினார் நாகேந்திரன்: நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை எழுத்து மூலமாக அளித்தார். தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட ரூ.4 கோடி வழக்கு விசாரணைக்கு நேற்று நயினார் நாகேந்திரன் ஆஜராக வேண்டி இருந்த நிலையில், 10 நாள் அவகாசம் கேட்டு கடிதம் அளிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அவரின் உறவினரான முருகன் உட்பட அவர் நிறுவனத்தில் பணிபுரியும் ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோரையும் தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகிய இருவரும் தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தனர். பின்னர் மாலை நேரத்தில், நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் என்பவர் தாம்பரம் காவல் நிலையத்தில் உதவி ஆணையர் முன்னிலையில் ஆஜராகி விளக்கமளித்தார்.
ஆஜராகிய முருகனின் வாக்குமூலம்: அப்போது அவரிடம் 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது 'ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகிய இருவரையும் தான் அனுப்பி வைத்ததாகவும்; ஆனால், அவர்கள் கொண்டு சென்ற பணத்தைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது' என முருகன் எழுத்துப்பூர்வமாக தனது வாக்குமூலத்தை அளித்துவிட்டு சென்றுள்ளார்.
மேலும், தாம்பரம் காவல்துறையினர் தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் நயினார் நாகேந்திரனுக்கு இரண்டாவது சம்மன் அனுப்பி விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் தனது சொந்த காரணங்களுக்காக விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் கால அவகாசம் கேட்டிருப்பதாக கூறி, அவரது வழக்கறிஞர் ஜெயகர் டேவிட் என்பவர் கடிதம் ஒன்றை காவல் ஆய்வாளர் மூலம், தாம்பரம் உதவி காவல் ஆணையரிடம் ஒப்படைக்கும்படி, கூறி அளித்துள்ளார். இக்கடிதம் தொடர்பாகா, உதவி ஆணையர் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பார் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் கேட்ட நயினார் நாகேந்திரன்! - Rupees 4 Crore Seized Case