புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1.25 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பாஜக எதிர்க்கட்சி அரசுகளை, எதிர்க்கட்சி உறுப்பினர்களை, எதிர்க்கட்சி குரலை அடக்க வேண்டும் என்று முயற்சிக்கிறது. நாடாளுமன்றத்திலும் பேச விடுவது கிடையாது, அதேபோல் நிதி ஆயோக் கூட்டத்திலும் பேச விடுவது கிடையாது.
ஒரு முதலமைச்சர் ஐந்து நிமிடம் நிதி ஆயோக் கூட்டத்தில் பேசியிருக்கிறார். இன்னும் பத்து நிமிடம் பேச வேண்டும் என்று விரும்பினால் ஏன் அனுமதிக்கக் கூடாது? எதிர்க்கட்சி முதலமைச்சர் தற்போது ஐந்து நிமிடம் பேசினால் என்ன, இது கண்டிக்கத்தக்கது" எனக் கூறினார்.
அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், "மத்திய அரசுக்கு, மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எந்த ஒரு அடிப்படையும் இல்லாமல் வைக்கும் குற்றச்சாட்டு. எந்த திட்டத்தில் எந்த தருணத்தில் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு ஒத்துழைக்கவில்லை என்று பட்டியலிட வேண்டும்.
எந்த நிதியை ஒதுக்கி, தமிழ்நாடு அரசு அதை செலவு செய்யவில்லை என்று ஆதாரப்பூர்வமாகச் சொன்னால் அதற்கு பதில் சொல்லலாம். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை நம்பி பல கிராமப்புறத்தில் மக்கள் இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் 100 நாள் ஒரு நபருக்கு வேலை கொடுக்காமல், ஒரு குடும்பத்திற்கு கொடுக்கிறார்கள்.
60 வயதிற்கு மேல் இருப்பவர்களை வரக்கூடாது என்று கூறுகிறார்கள். அவர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று சொன்னோம். அதையும் உயர்த்தவில்லை, இந்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கவில்லை. சாதாரண மக்கள் பயன்படக்கூடிய திட்டங்களுக்கு நிதியை குறைத்துக் கொண்டிருக்கிறார்கள்" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழிசை சௌந்தரராஜனுக்கு மீண்டும் ஆளுநர் பதவி கிடைக்கவில்லை என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். தெலங்கானாவில் சௌரியமாக ஆளுநராக இருந்தவரை அண்ணாமலையின் சித்து விளையாட்டால் பலிகாடக்கப்பட்டார். மீண்டும் ஆளுநர் பட்டியலில் தமிழிசை சௌந்தரராஜன் பெயர் இல்லாததைக் கண்டு வருத்தம் அடைகிறேன்" என்றார்.
மேலும், துணை முதலமைச்சராக திருமாவளவனை ஏன் தேர்வு செய்யக்கூடாது என்ற தமிழிசை சௌந்தரராஜனின் கருத்து குறித்து கேட்ட போது, "யாரை அமைச்சராக்க வேண்டும், யாருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், யாரை நீக்க வேண்டும் என்பது மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் முழு உரிமை. அவர் யாரை வேண்டுமானாலும் நீக்கலாம். யாரை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்" எனக் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: பேராசிரியர்களை போலி கணக்கு காண்பித்த பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்; அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி!