சென்னை: பாஜக மீது தமிழக மக்கள் வைத்துள்ள நம்பிக்கை, வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு தெளிவாக தெரிந்துவிடும் என சென்னை விமான நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, “இதுவரை பாஜக எந்த மாதிரி திட்டங்களை கொண்டு வந்துள்ளது என தெரியவில்லை. தற்போது தேர்தல் வரவுள்ள நிலையில், சில திட்டங்களை அறிவித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எத்தனை முறையோ பிரதமரைச் சந்தித்து, நல்ல திட்டங்கள் குறித்து கோரிக்கை வைத்தும், இதுவரை எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
இதேபோல் கடந்த மழை, வெள்ள பாதிப்புக்கான நிதியைக்கூட ஒன்றிய அரசு இன்னும் கொடுக்கவில்லை. ஒன்றிய அரசு நல்ல திட்டங்களை கொண்டு வரும்போது, ஒருபோதும் தமிழ்நாடு அரசு தடுக்கவில்லை. இந்தியாவிலேயே விளம்பரத்திற்காக அதிகம் செலவழிக்கக் கூடிய கட்சி பாஜகதான், அவர்களின் எந்த விளம்பரத்திலும் தேசியக்கொடி இருப்பதாக நான் பார்த்ததில்லை” என திமுகவின் விளம்பரத்தில் தேசியக்கொடி இல்லை என விமர்சனம் எழுந்த நிலையில் பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்திற்கு கால் பங்குதான் ஒன்றிய அரசு நிதி வழங்குகிறது, மீதி தொகையை தமிழ்நாடு அரசுதான் வழங்கி வருகிறது. ஆனால், அதற்கு பிரதமர் மந்திரி வீடு வழங்கும் திட்டம் என பெயர் வைத்து, ஸ்டிக்கர் ஒட்டி வருவது பாஜகதான். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுக கட்சியே இருக்காது எனக் கூறிய பல பேர் காணாமல் போய் உள்ளதை நாங்கள் பார்த்துள்ளோம். இன்னும் திமுக இருந்து கொண்டுதான் இருக்கிறது.
தமிழக மக்கள் பாஜக மீது வைத்துள்ள நம்பிக்கை, கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் தெரிந்தது. தற்போது வரக்கூடிய தேர்தலுக்கு பிறகு தெளிவாக தெரிந்துவிடும். மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில், கருணாநிதி குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்து வந்தோம். மேலும், அதற்கான இடத்தை தமிழக அரசுதான் துரிதமாக செயல்பட்டு ஒதுக்கி கொடுத்துள்ளது.
சீனாவின் கொடிக்கு விளக்கம்: சீனாவின் கொடி தவறுதலாக விளம்பரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆனாலும் சீன அதிபர் இந்தியா வந்து பிரதமர் உடன் வாக்கிங் செல்கிறார். அவர்கள் நமது எதிரி நாடு என இதுவரை யாரும் அறிவிக்கவில்லை. பிரதமர் நிகழ்ச்சியில் தனது பெயரை குறிப்பிடவில்லை. மேலும், நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினராக நானும், தமிழ்நாடு மூத்த அமைச்சரான எ.வ.வேலுவும் கலந்து கொண்டோம், எங்கள் பெயரைக் கூட சொல்வதற்கு பிரதமருக்கு மனம் இல்லை, அவர்களுக்கு தெரிந்த நாகரிகம் அவ்வளவுதான்.
பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்கிறது. பெரும்பான்மையான மக்களை அரசியலுக்காக அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதனை தமிழ்நாட்டு மக்கள் நன்றாக புரிந்து கொண்டனர். மதம் வேறு, அரசியல் வேறு என தெளிவாக தெரிந்து கொண்டவர்கள். தமிழ்நாட்டு மக்களுகாக போராடக்கூடிய கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் என தமிழ்நாட்டு மக்கள் தெரிந்து கொண்டவர்கள்.
அயோத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை, ஆனால் இதனை அரசாங்க சாதனையாக கூறுகிறார்கள். அந்த கோயில் டிரஸ்ட் மூலமாக கட்டினார்கள், அயோத்தி கோயில் தீர்மானத்தின்போது, நாடாளுமன்றத்தில் இருந்து நாங்கள் வெளிநடப்பு செய்தது, அது ராமர் கோயில் கட்டுவதற்கு அல்ல. அவர்கள் பேசிய கருத்துகளுக்காக. 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ளது. எத்தனை கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளார்கள் என கணக்கிட்டு கூற வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: சொந்த தொகுதியில் கனிமொழி பெயரை கூறாமல் கடந்த பிரதமர் மோடி!