சென்னை: நிதிப் பற்றாக்குறை காரணமாகவே சூரை மீன்பிடி துறைமுகம் பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், டிசம்பர் மாதத்திற்குள் இந்த பணி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூர் குப்பம் அருகே மீனவர்கள் தங்கள் படகுகளையும், மீன்பிடி உபகரணங்களையும் பாதுகாப்பாக வைப்பதற்காக புதிதாக சூரை மீன்பிடி துறைமுகத்தில் கட்டப்பட்டு வரும் தூண்டில் வளைவு பகுதியை, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் மாதவரம் சுதர்சனம், கே.பி.சங்கர் மற்றும் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கலாநிதி வீராசாமி, "திருவெற்றியூர் மீன்பிடி துறைமுகத்தில் கட்டப்பட்டு வரும், சூரை மீன்பிடி துறைமுகத்தின் தூண்டில் வளைவு 3 ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி கட்டுமான பணிகள் முடிவடைய வேண்டிய நிலையில், நிதிப் பற்றாக்குறையால் தற்போது காலதாமதமாகிக் கொண்டிருக்கிறது. டிசம்பரில் முடிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்திற்காக ஒன்றிய அரசிடமிருந்து ரூ.150 கோடியும், தமிழக அரசு ரூ.50 கோடியும் கொடுத்து மீன்பிடி துறைமுகத்தில் தூண்டில் வளைவைக் கட்டி வருகிறோம். தூண்டில் வளைவின் முனைப்பகுதி சற்று நீளம் குறைவாக இருப்பதாகவும், இதனால் புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை போன்ற இடர்களின் போது மீனவர்களின் பொருட்களும், உயிர் சேதமும் ஏற்படுவதற்கான அதிக ஆபத்துகள் இருப்பதாக மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக ஆய்வு செய்த போது, "3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தூண்டில் வளைவு கட்டும்போதே, நீளம் சற்று குறைவாக உள்ளது" என மீனவ மக்கள் கோரிக்கை வைத்தனர். தற்போது பெருவாரியான பணிகள் முடிவடைந்த நிலையில், மீனவர்களின் கோரிக்கையை ஏற்று தூண்டில் வளைவின் முனைப்பகுதியை சுமார் 10 மீட்டர் நீளத்திற்கு அதிகப்படுத்த ஒன்றிய அரசிடம் நிதி பெற்று, அதற்கான பணிகளும் விரைந்து செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் தூண்டில் வளைவில் இருக்கும் ஆபத்துகள் குறித்து ஐஐடி குழுவினர் மற்றும் துறை அதிகாரிகள் என அனைவரும் இணைந்த குழு மூலம் ஆய்வு செய்து, ஆபத்துகளின் நிலை அறிந்து தூண்டில் வளைவு நீளத்தை அதிகமாகி கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க உள்ளோம்" எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் சுதர்சனம், "இந்த திட்டம் ஆரம்பிக்கும் போது குறைந்த அளவு நிதி ஒதுக்கப்பட்டு மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி தொடரப்பட்டது. தற்போது நமது திமுக ஆட்சியில் மீனவர்களுக்கு ரூ.74 கோடி அதிகமாக நிதி ஒதுக்கி தற்போது இந்த மீன்பிடித் துறைமுகத்தைக் கட்டும் பணியை செய்து வருகிறோம்" என்றார்.
அதனைத் தொடர்ந்து, திருவொற்றியூர் அண்ணாமலையார் ரயில்வே கேட் பகுதியில் கட்டப்பட்டு வரும் ரயில்வே சுரங்கப்பாதை பணிகளையும், விம்கோ நகர் ரயில்வே சுரங்கப்பாதை பணிகளையும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது, மாநகராட்சி துறை அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்