கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வந்த பிரபு என்ற மாணவர், கடந்த அக்டோபர் 28ஆம் தேதி கல்லூரியின் மாடியில் இருந்து குதித்தார். இதனால் அவருக்கு கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் எலும்பு உடைந்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மாணவர் பிரபு தனக்கு சூப்பர் பவர் இருப்பதாக நினைத்து, மாடியில் இருந்து குதித்து இருப்பது தெரிய வந்தது.
இந்த நிலையில், தனது மகன் சூப்பர் பவர் இருப்பதாக நினைத்து குதித்தார் என்பதில் உண்மையில்லை என மாணவர் பிரபுவின் தாய் நாகலட்சுமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தன்னுடைய மகன் சூப்பர் பவர் இருப்பதாக நினைத்து குதித்தார் என்று சொல்வது தவறான தகவல் என்றும், குதிப்பதற்கு சிறிது நேரம் முன்பு கூட தன்னிடம் போனில் பேசினார் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சின்னத்திரை நடிகரின் மகன் கார் விபத்தில் உயிரிழப்பு!
மேலும் தனது மகனுக்கு தலை, கை, முதுகெலும்பு, கால்கள் என பல்வேறு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாகவும், மகனின் சிகிச்சைக்கு 20 லட்சம் ரூபாய் செலவாகும் என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும், சூப்பர் பவர் என நினைத்து குதித்தார் என வரும் செய்திகளால் உதவி செய்ய வருபவர்கள் கூட உதவி செய்யத் தயங்குகின்றனர் என்றும் கூறியுள்ளார்.
மகனின் நண்பர்களிடம் கேட்ட பொழுது, சூப்பர் பவர் போன்றதைப் பற்றி எந்த தகவலும் சொல்லவில்லை என்றே தெரிவித்து இருப்பதாகவும், சிறு வயதில் இருந்து நன்றாக படிக்கக்கூடிய மாணவன், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை வாங்கி வைத்துள்ளான் என்றும், அவனுக்கு என்ன பிரச்னை என்று அவன் எழுந்து வந்து சொன்னால் தான் தெரியும் என்றும் கூறியுள்ளார்.
பிரபு தேர்வில் மதிப்பெண் குறைவு என்ற வருத்தத்தில் இருந்தாகவும், ஆனால் என்ன பிரச்னை என்பது தெரியவில்லை என்றும், காவல்துறை உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், தமிழக முதலமைச்சர், மாணவரின் சிகிச்சைக்கு உதவ வேண்டும் என்றும் பேசியுள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்