கோயம்புத்தூர்: சென்னை திருமுல்லைவாயலில் அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் காரமடை பெள்ளாதி பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவரது இரண்டாவது மகள் ரம்யா. இவர் சென்னையில் தனது கணவர் வெங்கடேஷ் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் திருமுல்லைவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி இவர்களது 7 மாத கைக்குழந்தை பால்கனியில் இருந்து தவறி விழுந்த நிலையில், அங்கிருந்த குடியிருப்புவாசிகள் பல முயற்சிகளை மேற்கொண்டு குழந்தையை பத்திரமாக மீட்டனர். இதனையடுத்து, மேற்கூரையில் விழுந்து கிடந்த குழந்தையை மீட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, குழந்தையின் தாயை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வந்தனர். குழந்தையை சரியான முறையில் கவனிக்கவில்லை என்றும் விமர்சிக்கப்பட்டது. இதனால், குழந்தையின் தாய் ரம்யா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது.
இதனால், ரம்யா அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் தங்கள் சொந்த ஊரான கோவை மாவட்டம் காரமடைக்கு வந்துள்ளார். அங்கு கடந்த சில வாரங்களாக குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று ரம்யாவின் தாய், தந்தை மற்றும் குடும்பத்தினர் ஒரு நிகழ்ச்சிகாக வெளியே சென்றுள்ளனர். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த ரம்யா, திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து, வெளியில் சென்றவர்கள் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்து நிலையில், ரம்யா தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், மருத்துமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காரமடை போலீசார், ரம்யாவின் உடலை மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் குழந்தை தவறி விழுந்த சம்பவத்திற்குப் பிறகு, குழந்தையின் தாய் ரம்யா கடும் மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பால்கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தை… போராடி மீட்ட வீடியோ வைரல்! - Chennai Child Rescue Video