வேலூர்: வேலூரை அடுத்த அலமேலுமங்காபுரம் பகுதியுள்ள அழகிரி நகரில் வசித்து வரும் கூலித்தொழிலாளி நந்தகுமார். இவர் வெல்டிங் தொழில் செய்து வரும் நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆந் தேதி நித்யஸ்ரீ (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த தம்பதியருக்கு தற்பொழுது மூன்று வயதில் யோகேஸ்வரன் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் நித்யஸ்ரீயும், யோகேஸ்வரனும் நேற்று (டிச.15) இரவு வீட்டில் மர்மமான முறையில் சடலமாக இருந்துள்ளதாகவும் மேலும், நித்தியஸ்ரீயின் கழுத்தில் கயிறு அழுத்தியதற்கான அடையாளங்கள் இருந்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், தாயும் குழந்தையும் இறந்த தகவல் கேட்டு உறவினர்கள் அங்கு சென்றபோது நித்தியஸ்ரீ மற்றும் யோகேஸ்வரன் ஆகியோரது உடல்களை பார்த்ததும் கதறி அழுதபடி, ஆத்திரத்தில் அங்கிருந்த நந்தகுமாரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதனை அடுத்து, தகவல் அறிந்து விரைந்து வந்த சத்துவாச்சாரி போலீசார் பலத்த காயங்களுடன் நந்தகுமாரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது, "நித்தியஸ்ரீ, சத்துவாச்சாரி சுதந்திர பொன்விழா நகர் பகுதியைச் சேர்ந்தவர். அவரும் நந்தகுமாரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் பிறந்து உடல் நலக்குறைவால் இறந்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, மூன்றாவதாகப் பிறந்த ஆண் குழந்தை யோகேஸ்வரனும் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நித்தியஸ்ரீக்கும் நந்தகுமாருக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவு: திருப்பத்தூரில் பெண் படுகொலை.. இருவர் கைது!
நாங்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மெத்தையில் தாய் மற்றும் மகனின் இரு உடல்களும் அருகருகே கிடந்தது. நித்தியஸ்ரீயின் கழுத்தில் கயிறு போட்டு அழுத்தியதற்கான அடையாளங்கள் இருந்தது. ஆனால், குழந்தை இறப்புக்கான காரணம் ஏதும் தடயங்களாக கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒருவேளை குடும்ப தகராறு காரணமாக நித்தியஸ்ரீயே குழந்தையை கொன்றுவிட்டு, தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. என்ன நடந்தது என்பது குறித்து நந்தகுமாரிடம் விசாரிக்க முடியாத சூழல் உள்ளது.
அவர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம் அறிக்கை வந்த பின்னரே இருவரின் இறப்புக்கான காரணம் தெரிய வரும்"
எனக் கூறியுள்ளனர்.
இதுமட்டும் அல்லாது, இதுதொடர்பாக சத்துவாச்சாரி போலீசார் வழக்குப் பதிவு செய்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்தார்களா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கி உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.