ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் அடுத்துள்ள ராயல் லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன். இவர் காலையில் காய்கறி வியாபாரம் செய்துவிட்டு, மற்ற நேரங்களில் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் உணவகத்தில் சப்ளையராகவும் வேலை செய்து வருகிறார்.
இவருக்கு ஹசீனா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகள் ஆயிஷா பாத்திமா என்பவர் கருங்கல்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், இரண்டாவது மகள் ஜனா பாத்திமா அதே பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இதனிடையே, ஜாகீர் உசேன் கடந்த காலங்களில் பல்வேறு தொழில்கள் செய்து நஷ்டம் அடைந்ததாகவும், அதற்காக வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த மனைவி ஹசீனா பல்வேறு குழுக்களில் கடன் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) காலை ஜாகிர் உசேன் தனது மனைவியுடன் சண்டையிட்டு விட்டு வேலைக்குச் சென்றதாகவும், அவரது மனைவி மற்றும் மகள்கள் வீட்டில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, மாலை ஜாகிர் உசேன் அவரது மனைவிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, நீண்ட நேரமாகியும் அவர் பதிலளிக்காததால் சந்தேகமடைந்த அவர், அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஹசீனா மற்றும் அவரது இரண்டு மகள்கள் தற்கொலை செய்து உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், கருங்கல்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், இச்சம்பவம் குறித்து மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கடன் பிரச்னை காரணமாக மனமுடைந்த ஹசீனா மற்றும் அவரது மகள்கள் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும், சம்பவம் நடந்த இடத்தில் உருது மொழியில் எழுதப்பட்ட கடிதமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதில், தந்தையை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்றும், அவரை குடிக்க வேண்டாம் என கூறுங்கள் போன்ற பல்வேறு விவரங்கள் எழுதப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், முழு விசாரணைக்கு பின்னரே தற்கொலைக்கான உண்மை காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்கொலையைக் கைவிடுக: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் 104 என்கிற எண்ணுக்கு அழையுங்கள் அல்லது சிநேகா உதவி எண்ணுக்கு (044-24640050) அழையுங்கள். மேலும், இணைய வழித் தொடர்புக்கு (022-25521111) என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
மேலும், மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள help@snehaindia.org எனும் மின்னஞ்சல் முகவரியிலும், நேரில் தொடர்புகொள்ள சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம் சென்னை - 600028 என்கிற முகவரிக்கு நேரில் சென்று தொடர்பு கொள்ளலாம்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: தூத்துக்குடி மீன் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா கசிவு.. 29 பெண்கள் மருத்துவமனையில் அனுமதி!