தூத்துக்குடி: கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (45). இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மாரீஸ்வரி (39) என்ற மனைவியும், சரிதா என்ற மகளும் உள்ளார். இந்நிலையில், குணசேகரன் தனது மனைவியின் மீது சந்தேகப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து அவர், கணவரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். அதன்பிறகு குணசேகரன் மனைவியை வீட்டிற்கு வருமாறு அழைத்தும் அவர் வர மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று மாரீஸ்வரி தனது மகள் சரிதாவுடன் அதே பகுதியில் உள்ள கடலைக்கார தெருவில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த குணசேகரன், திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மனைவி மாரீஸ்வரியை வெட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தடுக்க வந்த மகள் சரிதாவுக்கும் வெட்டு விழுந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, காயமடைந்த இருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக மாரீஸ்வரி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து குணசேகரனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: “ஏன் மோதுற மாதிரி வந்தீங்க?”.. கண்மூடித்தனமாக அடித்த போதை கும்பல்.. திருவாரூரில் பரபரப்பு!