கோவை: தியாகத் திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகையை இன்று நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாகக் கோவையிலும் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பல்வேறு பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை நிகழ்ச்சியானது நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள இஸ்லாமியப் பள்ளி மைதானத்தில் சிறப்பு தொழுகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இஸ்லாமியர்கள் ஒரே இடத்தில் கூடி இந்த சிறப்பு தொழுகை நிகழ்வில் பங்கேற்றனர்.
இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை ரம்ஜான், பக்ரீத் ஆகிய இரண்டு பண்டிகைகள் முக்கியமான பண்டிகைகளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இறைத்தூதர்களில் ஒருவரான முகமது இப்ராஹிம் தனது மகனான இஸ்மாயிலை இறைவனுக்காகப் பலி கொடுக்க முன்வந்த தியாகத்தைப் போற்றும் விதமாக இந்த பக்ரீத் பண்டிகையானது தியாக திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடு, மாடு போன்றவற்றை குர்பானி வழங்கப்படும் நிகழ்வும் நடத்தப்படுகிறது. ஆடு, மாடு போன்றவற்றைப் பலியிட்டு அதை மூன்று பங்குகளாகப் பிரித்து ஒரு பங்கை தனக்கும், மற்றொரு பங்கை உற்றார் உறவினர்களுக்கும், இன்னொரு பங்கை ஏழை எளிய மக்களுக்கும் வழங்கி அனைவரும் மகிழ்ச்சியுடன் இந்த பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.
இறைச்சி வகைகளைப் பிரியாணி உள்ளிட்ட உணவு உணவாகச் சமைத்து அண்டை வீட்டாருக்கும் நண்பர்களுக்கும் வழங்கி பக்ரீத் பண்டிகையை இஸ்லாமியர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: நான் முதல்வன் திட்டம்; லண்டனில் பயிற்சி பெற்று திரும்பிய தமிழக மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு!