சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து செல்லக்கூடிய பயணிகள் ரயில்கள் ரத்தாகி, ஆவடி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டதால், ஆவடியில் பல்லாயிரக்கணக்கான பயணிகள் காத்திருந்தனர். சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லக்கூடிய சேரன் விரைவுவண்டி, நீலகிரி எக்ஸ்பிரஸ், பாலக்காடு எக்ஸ்பிரஸ் மும்பை செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆவடியில் இருந்து புறப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த ரயில்கள் 9 மணிக்கு மேல் புறப்பாடு என அறிவிக்கப்பட்ட நிலையில், இரவு வரை மழையில் மக்கள் காத்திருந்த சூழலில், சுமார் 12 மணிக்கு மேல் ரயில் வருவதாக அறிவிப்பு வெளியாகியானது. போதிய வசதி இல்லாத ஆவடி ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 2000 பயணிகள் குவிந்ததால் நிற்கக் கூட இடம் இல்லாமல் ஆங்காங்கே பயணிகள் தவித்தனர்.
போதிய முன்னேற்பாடு இல்லாமல் ஆவடியில் இருந்து ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்த நிலையில், ஆவடி ரயில் நிலைய சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கக்கூடிய அனைத்து கடைகளும் மூடியிருப்பதால், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டு பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
இதையும் படிங்க: 'விழுந்தால் கட்டிக்கொடுக்கிறோம்'.. சூளைமேட்டில் சரிந்த அப்பார்ட்மெண்ட் சுற்றுச்சுவர்.. பீதியில் குடும்பங்கள்!
பெண் பயணிகள் அவசரத்திற்கு கழிப்பறை பயன்படுத்த போதிய வசதி இல்லாததால் செய்வதறியாது திகைத்தனர். இதுமட்டும் அல்லாது, ரயில் நிலைய வளாகத்தில் போதிய போலீஸ் பாதுகாப்பும் இல்லாததால் பாதுகாப்பு கேள்விக்குறியானது.
கைக்குழந்தைகள் வைத்திருக்கும் பயணிகள் மழையில் குழந்தைகளை படிக்கட்டுகளில் வைத்து தூங்க வைத்துக் கொண்டு சிரமம் அடைந்தனர். மேலும், ரயில் வருமா? வராதா? என நடைமேடையில் இடமிருப்பவர்கள் உறங்கியும் இடம் இல்லாதவர் நனைந்தபடியும் நின்று கொண்டிருந்தனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்