சென்னை: ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் தொடக்கக் கல்வித்துறையில் 2199 பேரும், பள்ளிக்கல்வித்துறையில் 2000 பேரும் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியிடமாறுதல் பெறுவதற்கு ஒரே நாளில் விண்ணப்பித்துள்ளனர்.
2024 - 2025ஆம் கல்வி ஆண்டில் தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறை நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி, ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொது மாறுதல் விண்ணப்பங்களை இன்று(மே.13) முதல் மே.17 அன்று மாலை 6 மணி வரை கல்வி மேலாண்மை தகவல் முறைமை (EMIS) இணையதளத்தில் பதிவேற்றம் மேற்கொள்ளலாம்.
ஒவ்வொரு ஆசிரியரும் மாறுதலுக்கான விண்ணப்பத்தினை விண்ணப்பிக்கும்போது கல்வி மேலாண்மை தகவல் முறைமை (EMIS) இணையதளத்தில், தங்களுக்கான Individual Login IDஐ பயன்படுத்தி மாறுதல் கோரும் படிவத்தில் உரிய விவரங்களைப் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.
அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் போது ஏதேனும் தங்கள் சார்பான விவரங்கள் தவறுதலாக இருப்பின் (பிறந்த தேதி, பணியில் சேர்ந்த நாள், தங்கள் பள்ளியின் பெயர் மற்றும் இதரவைகள்) அதிலிருந்து வெளியேறி தங்கள் பள்ளிக்கான Login ID do Teacher Profile சென்று தவறாக உள்ள விவரங்களை சரிசெய்து பின்னர் தங்களுடைய Individual Login IDக்கு சென்று அனைத்து விவரங்களையும் சரியாகப் பூர்த்தி செய்யப்பட்டவுடன் Submit செய்திடல் வேண்டும்.
மாறுதல் கோரும் விண்ணப்பத்தில் முன்னுரிமை (Priority) கோரி விண்ணப்பிக்கும் போது, அதற்கென உரிய அலுவலரால் அளிக்கப்பட்ட ஆதாரத்தை (ஆவண நகல்) இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தற்போது பணிபுரியும் பள்ளியில் மாறுதல் பெற்ற ஆணை இணைக்கப்படல் வேண்டும். விருப்ப மாறுதல், மனமொத்த மாறுதல், நேரடி நியமனம், பதவி உயர்வு, நிர்வாக மாறுதல், அலகு விட்டு அலகு மாறுதல், பணிநிரவல் இவற்றில் எந்த வகை என்பதை உரிய ஆதாரத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
கணவன் - மனைவி (Spouse priority) முன்னுரிமையில் மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் அவரவர் பணிபுரியும் அலுவலகம், பள்ளி, அரசு மற்றும் அரசுத் துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ளதா என்ற விவரத்தினையும், அதற்கான உரிய அலுவலரிடம் (Competent authority) பெறப்பட்ட சான்றினையும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். கணவன் - மனைவி பணிபுரியும் இடத்திற்கான தொலைவு 30 கி.மீ மேல் உள்ளதைச் சரிபார்த்து உறுதி செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் கூறும் போது, "மாறுதல் கோரும் ஆசிரியரின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் விண்ணப்பங்களை வட்டாரக் கல்வி அலுவலர் தினமும் சரி பார்த்து உரிய ஒப்புதல் வழங்கப்பட வேண்டும்.
வட்டார கல்வி அலுவலர்களால் வழங்கப்பட்ட ஒப்புதலின் அடிப்படையில், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஒப்புதல் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இரு அலுவலர்களும் ஒப்புதல் வழங்கப்பட்ட பிறகு ஆசிரியர்களின் விண்ணப்பம் முழுமை அடைந்ததாகக் கணினி எடுத்துக் கொள்ளும். எனவே எவ்வித விடுதலும் இன்றி மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்து இரு அலுவலர்களும் தினம்தோறும் ஒப்புதல் அளித்து நிலுவைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும், இடைநிலை ஆசிரியர்களில் ஒன்றியத்திற்குள் 534, கல்வி மாவட்டத்திற்குள் 188, வருவாய் மாவட்டத்திற்குள் 192, மாநில அளவிலான முன்னுரிமையில் 202 என 1116 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
பட்டதாரி ஆசிரியர்களில் ஒன்றியத்திற்குள் 273, கல்வி மாவட்டத்திற்குள் 116, வருவாய் மாவட்டத்திற்குள் 118, மாநில அளவிலான முன்னுரிமையில் 151 என 658 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களில் ஒன்றியத்திற்குள் 258, கல்வி மாவட்டத்திற்குள் 46, வருவாய் மாவட்டத்திற்குள் 24, மாநில அளவிலான முன்னுரிமையில் 34 என 362 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களில் ஒன்றியத்திற்குள் 3, கல்வி மாவட்டத்திற்குள் 27, வருவாய் மாவட்டத்திற்குள் 18, மாநில அளவிலான முன்னுரிமையில் 15 என 63 இடங்கள் மாறுதலுக்காக விண்ணப்பம் செய்துள்ளனர்.
அதேபோல், பள்ளிக்கல்வித்துறையில் 2000க்கும் மேற்பட்ட பட்டதாரி, முதுகலை பட்டதாரி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் வேண்டி விண்ணப்பம் செய்துள்ளனர். கலந்தாய்வு அறிவிக்கப்பட்ட ஒரே நாளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிடம் மாறுதலுக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: பாட்டிகளுடன் லுட்டியாக தாயம் விளையாடி இளைய தலைமுறை அசத்தல்! - TRADITIONAL GAMES Competitions