திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வெள்ளை மந்தி உள்ளிட்ட பல்வேறு இன குரங்குகள் உள்ளன. இவை அடிக்கடி மலையில் இருந்து கீழே இறங்கி, அருகில் உள்ள சிவந்திபுரம், விகே.புரம் குடியிருப்பு பகுதியில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், பாபநாசம் அருகே உள்ள சிவந்திபுரத்தைச் சேர்ந்த தங்கம் என்ற மூதாட்டி மற்றும் கொத்தனார் வேலை பார்த்து வந்த சுதாகர் ஆகிய இருவரையும், நேற்று முன்தினம் குரங்கு வெறித்தனமாக தாக்கியுள்ளது. இதில் காயமடைந்த இருவரும் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறிப்பாக, சில குரங்குகள் மிகவும் ஆக்ரோஷமாக மக்களிடம் நடந்து கொள்வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இருவரையும் தாக்கிய குரங்குகளை வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில், வனத்துறை இணை இயக்குனர் இளையராஜா உத்தரவின் பேரில், சிவந்திபுரம் பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது.
இந்த கூண்டுக்குள் குரங்குகள் அகப்படாத நிலையில், இன்று சிவந்திபுரத்தைச் சேர்ந்த கிளாட்சன் என்பவரை குரங்கு ஒன்று கடுமையாக வலது கையில் தாக்கி உள்ளது. அவரும் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அடுத்தடுத்து இரண்டு நாட்களில் மூன்று பேரை தாக்கிய குரங்குகளைப் பிடிக்க வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டனர். இந்நிலையில், இணை இயக்குனர் இளையராஜா மற்றும் வனச்சரகர் சத்தியவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
பின்னர், வன கால்நடை மருத்துவர் மனோகரன் தலைமையிலான குழுவினர், சிவந்திபுரம் பகுதியில் 3 பேரை தாக்கிய, இரண்டு குரங்குகளை துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிபட்ட இரண்டு குரங்குகளையும் பாதுகாப்பாக வனத்துறையினர் வனப்பகுதியில் விட்டனர்.
இதையும் படிங்க: கோவை, நெல்லையில் வெளுத்து வாங்கிய மழை.. 300 வீரர்களுடன் 10 பேரிடர் மீட்புக்குழு தயார்! - SDRF Actions In TN